'எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
”தமிழகத்தில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதனை மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக திருப்பி விடும் பிரச்சாரத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகின்றன.”
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் இடம் பெறாதது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”வரும் 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன. மாநில அரசுகள் தங்கள் சாதனைகளை, பெருமைகளை குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் மூலம் பறைசாற்ற விரும்புவது நியாயமானதே. ஆனால், 50, 60 அலங்கார ஊர்திகளை அணிவகுப்பில் இடம் பெறச் செய்வது நடைமுறை சாத்தியமற்றது.
குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் மட்டும் இடம் பெறுவதில்லை. முப்படைகள், தேசிய மாணவர் படை, சாரணர், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இதற்கே மூன்று மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும். 50, 60 ஊர்திகள் அணிவகுப்பில் வலம் வந்தால் மேலும் சில மணி நேரங்கள் ஆகலாம். அவ்வளவு நேரமும் பார்வையாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது சாத்தியமில்லை. அதுமட்டுமல்ல இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
பாதுகாப்பு, கொரோனா கட்டுப்பாடுகள், பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை முடிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பல மத்திய அமைச்சகள், மாநில அரசுகள் குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 19, 2022
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.
👇👇👇https://t.co/JGlw0ZhSiH pic.twitter.com/Vu2hPp9gGa
குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை, ஓவியம், சிற்பம், இசை, நடனம், வடிவமைப்பு ஆகிய துறைகளின் வல்லுர்கள் அடங்கிய குழுதான் ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது. முதலில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அலங்கார ஊர்தியின் மையக் கருத்து, அவற்றை வெளிப்படுத்தும் விதம், ஊர்தியில் இடம் பெறும் ஓவியம், சிற்பம், பாடல், இசை, நடனம், உடையலங்காரம், வண்ணம், வடிவமைப்பு மற்றும் தரம் ஆகிய அம்சங்களை மதிப்பிட்டு தான் ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 21 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதியில் இன்னமும் குறையும்.
அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதில் மத்திய அரசின் பங்களிப்பு, அரசியல் தலையீடு எதுவும் இல்லை. இதற்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளை சிறந்த உதாரணம். பாஜக ஆட்சியில் வீரப்ப மொய்லி, சசிதரூர் போன்ற காங்கிரஸ் தலைவர்களும், திமுகவைச் சேர்ந்த இமையமும், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க விடுதலைப் போராட்ட வீரர்களான வ.உ. சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியார் ஆகியோர் பற்றிய தமிழக அரசின் அலங்கார உதவிக்கு பாஜக அரசு அனுமதி மறுத்து விட்டதாக தவறாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெளிவான விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதனை மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக திருப்பி விடும் பிரச்சாரத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகின்றன. இதில் அவர்களுக்கு தற்காலிக வெற்றிகள் கிடைத்திருக்கலாம். ஆனால், இப்போது மக்கள் உண்மையை உணரt தொடங்கி விட்டனர். எந்த ஒரு பொய்யும் நீண்ட காலம் நிலைக்க முடியாது. இது தகவல் தொழிநுட்ப யுகம். இங்கு ஒவ்வொருவரும் பத்திரிகையாளர் தான். ஒவ்வொருவரும் புலனாய்வு பத்திரிகையாளர் தான். சில நிமிடங்கள் செலவழித்தால் போதும், எந்த ஒரு விஷயத்திலும் உண்மை எது, அவதூறு எது தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. எனவே இனியும் திமுகவின் இந்த அவதூறு பிரசாரம் எடுபடாது. திமுகவிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அவர்கள் என்ன சொன்னாலும் அதனை கொண்டு சேர்க்க சிலர் இங்கே துணை புரியலாம். ஆனாலும், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது.
எனவே அவதூறு பிரச்சாரங்களை கைவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட திமுக அரசு முன்வர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் மோசமான கலாச்சாரத்தை திமுக விட்டொழிக்க வேண்டும். வ.உ.சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியாரின் தேசிய சிந்தனைகளை தமிழகம் முழுவதும் கொண்டுச் செல்லும் முதலமைச்சரின் முயற்சிக்கு பாராட்டுகள்.
தமிழகம் நம் பாரத திருநாட்டின் சுதந்திரத்திற்கு கொடுத்த பங்களிப்பு மகத்தானது.
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 19, 2022
75 வது சுதந்திர ஆண்டிலே , தமிழக சுதந்திர வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நிரந்தர கண்காட்சிகூடத்தை @CMOTamilnadu @mkstalin அவர்கள் அமைக்க வேண்டும் . https://t.co/7esCynHbfY
"குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்படாத தமிழக அரசின் அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும். இந்த ஊர்தி, தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் அலங்கார ஊர்திக்கு விண்ணப்பித்து இருந்தாலும் 12 ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனையும் மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவே தேர்வு செய்துள்ளது. இந்த உண்மைகளை மறைத்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
இந்த அலங்கார ஊர்தியை குக்கிராமங்கள் வரை கொண்டுச் செல்ல வேண்டும். வ.உ.சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் தேசியம், தெய்வீகம் தாங்கிய கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களை நினைவு கூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு அலங்கார ஊர்தியை, தமிழக அரசு ஏற்பாடு செய்து, மாநிலம் முழுவதும் வலம் வரச் செய்ய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.