மேலும் அறிய
Advertisement
திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன்.. ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழ்ப்படையைத் திரட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்..!
வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும்போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டம் எங்கும் தங்கு தடையின்றி நடைபெற்ற காலம். கதர் சட்டையை கண்டால் அடி. கதர் குல்லாயைக் கொண்டால் அடி. வந்தேமாதரம் என்றால் உதை என்று ஆங்கியேர்களின் வெறியாட்டம் நடந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் தமிழக மக்களிடம் மறைந்து இருந்த புரட்சி கனலை தட்டியெழுப்பி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்முனைக்கு தமிழ்படைகளை அழைத்து சென்ற தமிழன் வ.உ.சிதம்பரனார். இவர் 1872-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார். நன்கு கல்வியறிவு பெற்ற அவர் சட்டப்படிப்பு முடித்து சட்ட நிபுணராக தேர்ச்சி பெற்றார். 1900-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கினார்.
இந்தியாவில் முதல்முதலாக ஹார்வி மில்லில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர்களுக்காக போராடி அதில் வெற்றியும் கண்டார். இந்த நிலையில் சுதேசியின் மீது சிந்தனையை செலுத்திய வ.உ.சி. பல்வேறு சுதேசி உணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளையர்களின் கொள்ளைகளை உணர்ந்தார். அதை ஒழித்துக் கட்ட தரும சங்க நெசவுச்சாலை, சுதேசிய நாவாய்ச் சங்கம், சுதேசிய பண்டகசாலைகளை ஆரம்பித்தார். அவர் மேடையிலேறி மக்களைத் திரட்டினார். அன்னிய ஆடைகளைக் கொளுத்தினார். அந்நியப் பொருள்களை கையால் கூட தொடுவதில்லை என்று உறுதியெடுத்தார்.
ஆங்கிலேயர்களின் கொள்ளை லாபத்துக்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் அபிவிருத்தியை தடுத்து சமாதிகட்ட திட்டமிட்டார். பாண்டியர்கள், சோழர்கள் காலம் முதல் கடலாதிக்கம் பெற்றிருந்த தமிழர்கள், ஆங்கிலேயர்களின் கப்பல் வர்த்தகத்தால் தடைபட்டுவிட்டது என்று கருதினார்.
இதனால் 1906-ம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கினார். இந்த கப்பல் கம்பெனியை தொடங்குவதற்காக வ.உ.சி. தூத்துக்குடி வாடித்தெருவில் வைத்து ஆலோசனை நடத்திய வ.உ.சி வாடி தெருவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வளைவு வடிவிலான ஆர்ச் முன்பாக அதற்கான பங்குபத்திரத்தில் கையெழுத்தும் இட்டார் என்கிறது வரலாற்று ஆவணங்கள்.
வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச்செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ். எஸ். லாவோ” என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.பின்னர் சுதேசி கப்பல் கம்பெனிக்கான பங்குகள் வெளியிடப்பட்டன. சுதேசி கப்பல் கம்பெனி நாடெங்கும் உள்ள வியாபாரிகளின் ஆதரவால் லாபகரமாக நடைபெற்றது. "எஸ். எஸ். காலியா, எஸ். எஸ். லாவோ" என்ற இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டன.
தூத்துக்குடியில் 80 சி என்ற கதவு இலக்கத்தில் கப்பல் கம்பெனி இயங்கி வந்தது. அதே நேரத்தில் வ.உ.சி. தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார் என தகவலும் உண்டு.
இந்த கப்பல் கம்பெனிக்கு பல வழிகளிலும் ஆங்கிலேயர்கள் நெருக்கடி கொடுத்தனர். வ.உ.சி. பாலகங்காதர திலக்கின் பக்தர். 1909-ம் ஆண்டு நெல்லையில் தேசாபிமான சங்கம் அமைத்தார். மக்களிடையே சுதந்திரத்தைப்பற்றி இந்த சங்கம் பிரசாரம் செய்து வந்தது. ஜில்லா மாஜிஸ்திரேட் உத்தரவை மீறி, பிபின் சந்திரபால் விடுதலையை இந்த சங்கம் கொண்டாடியது. ஜில்லா கலெக்டர், சிதம்பரம் பிள்ளையை அழைத்து, ஜில்லாவை விட்டு உடனே வெளியேறிவிட வேண்டும், அரசியல் நடவடிக்கையில் கலந்து கொள்வதில்லையென்று உறுதியளிக்க வேண்டுமென்றும் கூறினார்.
இதற்கு சிதம்பரம்பிள்ளை மறுத்துவிட்டார். ராஜ துரோக குற்றமிழைத்ததாக இவர் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையும் அடைந்தார். அந்த சமயம் இந்தியா மந்திரியாயிருந்த லார்டு மூர்லி, இத்தண்டனையை அங்கீகரிக்கவில்லை. கடைசியாக ஆயுள் தண்டனை ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. வ.உ.சி சிறை சென்றதும், கப்பல் கம்பெனி நொடிந்து விட்டது.
சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து சேவை செய்தார். 1936-ம் ஆண்டு தூத்துக்குடி 53 என்ற கதவிலக்கத்தில் உடல்நலக்குறைவு காரணமாக வ.உ.சிதம்பரானார் மரணம் அடைந்தாக தூத்துக்குடி நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் வீர முத்திரை பதித்த வ.உ.சிதம்பரனாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு நினைவு சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதே வ.உ.சிதம்பரனாரின் கனவை நிறைவேற்றும் வகையில் சுதந்திரத்துக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை பெயர் தாங்கிய கப்பல் பயணம் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் (1950 முதல் 1952 வரை) எம்.சி.வீரபாகுவால் (இரண்டாவது கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்பட்டவர்) 1949ல் தொடங்கப்பட்டது. இந்த கப்பல் பயணம் தொடக்க விழாவால் தூத்துக்குடி களைகட்டியது. விழாவுக்கு வரும் 30 ஆயிரம் பேருக்கு உணவு அளிப்பதற்கு ஓட்டல்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. நகரில் இருந்த 17 சாப்பாட்டு ஓட்டல்களுக்கும், 86 காபி ஓட்டல்களுக்கும் அரிசி, ரவை, கோதுமை மாவு முதலிய அதிகப்படியான ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டன.
நெல்லை, மதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டன. நெல்லை, ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், நாகலாபுரம் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டன.
கோலாகலமாக நடந்த இந்த விழாவில் அப்போதைய கவர்னர் ராஜாஜி கலந்து கொண்டார். தூத்துக்குடி கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தூரம் கடலில் நீராவிப்படகில் கவர்னர் ராஜாஜி சென்று கப்பலை அடைந்தார். அங்கு ஜனசமுத்திரம் கரகோஷம் செய்ய, ஜல சமுத்திரத்தில் வ.உ.சிதம்பரம் கப்பலை தொடங்கி வைத்தார். 1000 டன் எடைகொண்ட கப்பல் "வ. உ. சிதம்பரம்" விழா முடிந்தவுடன் இலங்கையில் உள்ள இந்திய தூதர் வி. வி. கிரியையும் ஏற்றிக்கொண்டு கம்பீரமாக இலங்கை நோக்கி முதல் தடவையாக பயணம் செய்தது. இந்தியர்களின் சொந்தக் கப்பல்களை மீண்டும் கடலில் மிதக்கவிட வேண்டுமென்ற முயற்சி முதலில் தென்னிந்தியாவில்தான் தோன்றியது என்ற விஷயத்தில் நாம் பெரிதும் பெருமை கொள்ளலாம். இந்த முயற்சியில் சிதம்பரம்பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் தம் உயிர்பொருள் அனைத்தையும் தியாகம் செய்தனர்.
வ.உ.சிதம்பரனாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய கப்பல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்களுக்கு வ.உ.சி. பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. தமிழக அரசு தூத்துக்குடியில் வ.உ.சி. வாழ்ந்து வீடு இருந்த டபிள்யூ.ஜி.சி. ரோட்டுக்கு வ.உ.சி. சாலை என்று பெயரிட்டு உள்ளது. இதே போன்று வ.உ.சி.யை பெருமைப்படுத்தும் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் ஓட்டப்பிடாரத்தில் இருந்த கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். அவர் பணியாற்றிய கோர்ட்டு கால ஓட்டத்தில் சேதம் அடைந்து கிடக்கிறது.
இன்றும் சிதைந்த கட்டிடமாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நீதிமன்ற கட்டிடத்தை மீண்டும் புதுப்பித்து ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றமும் வ.உ.சி பயின்ற திண்ணை பள்ளியிம் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion