Udhayanidhi Stalin Statement: ’ஆடம்பர செலவுகள் வேணாம்; இதை மட்டும் பண்ணுங்க’ - தொண்டர்களை அலெர்ட் செய்த உதயநிதி
கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து அளிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போன்ற தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிருங்கள் என தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து அளிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போன்ற தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிருங்கள் என தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இன்ஸ்டெண்ட் அரசியல் செய்யும் பாஜகவிடம் பொறுமை கிடையாது என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், "வருவாய் மாவட்டவாரியாக நடைபெற்றுவரும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமும் ஒரு சிறுபுள்ளியில் இருந்து தொடங்கியதுதான். சேலத்தில் வரும் டிசம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டுக்கு இளைஞர்களை மனரீதியாகத் தயார்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் சென்று அவர்களைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான் இந்தச் செயல்வீரர்கள் கூட்டம்.
ஒவ்வொரு செயல்வீரர்கள் கூட்டத்திலும் அதிகபட்சம் அரை மணிநேரம் உரையாற்றுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள மத்திய பாசிச பா.ஜ.க. அரசையும், மனிதகுலத்துக்கே எதிரியாக உள்ள பா.ஜ.க.வையும், அதற்கு உடந்தையாக இருந்து தமிழர்களின் நலன்களை விட்டுக்கொடுத்த அடிமை அ.தி.மு.க.-வையும் சம்பவங்களை உதாரணமாகச் சொல்லி விமர்சித்துப் பேசுகிறேன். நான் பேசும் விஷயங்களை இளைஞர்கள் வரவேற்று உள்வாங்கிக் கொள்கின்றனர்.
“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி-மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்’ என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது.
ஆனால், `இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது.
இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள்தான்.
இந்த நாடகத்தில், ‘தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்’, `நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்’, ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்’, மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்’ என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையைக் கழுவிவிடப் பா.ஜ.க. நினைக்கிறது. ‘பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே’ என்று எடப்பாடியும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குகள் போன்ற முக்கியமான பல வழக்குகளைச் சி.பி.ஐ கிடப்பில் போட்டிருப்பது போன்றவை எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன.
`கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்’, தூண்டிவிடப்பட்ட `மணிப்பூர் கலவரம்’, `சி.ஏ.ஜி.’ வெளியிட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என ஏற்கெனவே இரத்தக் கறையும் ஊழல் கறையும் படிந்தவர்களால், எடப்பாடி மீதுள்ள அதே கறைகளை எப்படிக் கழுவிவிட முடியும்?
பாசிச பா.ஜ.க.-வுக்கு அடிமையாக இருந்து மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்ததற்கான தண்டனையை, மக்கள் எடப்பாடி அண்ட் கோ-வுக்கு வழங்குவார்கள் என்பது நிச்சயம். எடப்பாடியின் தொடர் தோல்வியும் அதைத்தான் உணர்த்துகின்றன.”
மக்கள் விரோத அடிமை அ.தி.மு.க. – பாசிச பா.ஜ.க. குறித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இப்படிப் பேசும்போது அவர்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்குவதை உணரமுடிகிறது. இதுவரை 20 வருவாய் மாவட்டங்களில் இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மீதியுள்ள 18 வருவாய் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை டிசம்பர் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு ‘கலைஞர் நூலகம்’ அமைக்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் இளைஞர் அணியை அறிவுறுத்தி உள்ளார்கள். அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் முதல் ‘கலைஞர் நூலக’த்தைத் தொடங்கி வைத்தோம். இந்தச் சுற்றுப்பயணத்தில் கம்பம், பெரியகுளம், நாங்குனேரி, பாளையங்கோட்டை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி ஆகிய 6 தொகுதிகளுக்கான ‘கலைஞர் நூலக’-ங்களைத் தொடங்கி வைத்துள்ளோம். இதுவரை 15 தொகுதிகளில், கலைஞர் நூலகங்கள் தொடங்கப்பட்டு, மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இப்படி, இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம், கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது, கலைஞர் நூலகங்கள் திறப்பு, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம்… என இந்தச் சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததைவிட, மிகச்சிறப்பாக அமைந்திருந்தது மனதுக்கு நிறைவைத் தருகிறது.
கழக நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள். நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து அளிப்பது, பொன்னாடை - மாலை அணிவிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போன்ற தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிருங்கள். கழக வேட்டி – துண்டு மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக அளியுங்கள். அவை தேவையானோருக்கு பயன்படும். விரும்புவோர் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை; இளைஞர் அணி வளர்ச்சி நிதியாக அளியுங்கள். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.