உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதற்கு தகுதியானவர் - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மக்களுக்கு லாபம்தான் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கருத்து
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக உழவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடையே மனுக்களை வாங்கி வருகிறார். இன்று தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து காரிமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் இடையே கோரிக்கை மனுக்களை பெற சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த இரண்டு நாட்களில் சுமார் 18,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உழைப்பவர்களுக்கு மரியாதை உண்டு. உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆறு மாத காலமாக சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வீடு வீடாக சென்று மக்களுக்கு சந்தித்து, ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி பணியாற்ற வேண்டும் என்று இளம் வயதில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். அவர் அமைச்சர் ஆக தகுதியானவர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் அந்தத் துறை வளர்ச்சி அதிகமாக இருக்கும், மக்களுக்கு நேரடியாக சென்றடையும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மக்களுக்கு லாபம்தான் என தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்த கேள்விக்கு,
அவர்கள் செய்தால் பழிவாங்கும் நோக்கம் இல்லை,நல்லது. ஆனால் நாங்கள் செய்தால் அது தவறா? உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டம் இல்லை. இது மக்களுக்கு நன்றாக தெரியும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. பாஜகவினர் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வந்து செல்கிறார்கள். எல்லோருக்கும் நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது. அண்ணாமலை கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கர்நாடக மாநிலத்தில் எப்படி இருந்தது இங்கு எப்படி இருக்கிறது. அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்தவர். தற்போது தான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். ஒரு இளம் வயதில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் என்றால் என்ன நோக்கம். ஒரு ஐபிஎஸ் அதிகாரி வயது இருக்கிறது, ஆனால் ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் என்றால் ஏதோ எதிர்பார்த்துதான் வந்துள்ளார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் - அமைச்சர் மூர்த்தி