TVK Vijay New Plan: கரூர் சம்பவம்; 41 குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறாரா விஜய்.? புதிய பிளான் என்ன.?
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்னும் அவர் சந்திக்காத நிலையில், புதிய பிளானின் படி, அவர்கள் சென்னைக்கு வரவழைத்து பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில், கடந்த மாத இறுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் இன்னும் சந்திக்காமல் இருக்கிறார். விரைவில் அவர் அங்கு செல்வார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை சென்னைக்கு வரவழைத்து ரிசார்ட்டில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் நடந்த கொடூர சம்பவம்
கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் உட்பட, பல்வேறு கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
ஆனால், சம்பவம் நடந்தபோதே விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார். இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என விஜய் அறிவித்தார். அதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி, ஆறுதல் தெரிவித்தார். அப்போது, விரைவில் அவர்களை வந்து சந்திப்பதாகவும் கூறினார்.
இந்த சூழலில், கடந்த 17-ம் தேதி, விஜய் கரூருக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து நிவாரணத் தொகையினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. இருப்பினும், 18-ம் தேதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 20 லட்சம் ரூபாய் தவெக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விஜய் எப்போது கரூர் செல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனாலும், பாதிக்கப்பட்டோரை வி4ய் நேரில் சென்று சந்திப்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
விஜய்யின் சந்திப்பு திட்டத்தில் மாற்றம்.?
இந்த நிலையில் தான், தவெக தலைவர் விஜய்யின் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிளானின்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து, ரிசார்ட்டில் வைத்து அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை செயல்படுத்தும் விதமாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களை சென்னைக்கு அழைத்துவரும் வேலைகள் தொடர்பாக, அவரவர்கள் வீடுகளுக்கு தவெக நிர்வாகிகள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், சென்னைக்கு சென்று விஜய்யை சந்திக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அந்த திட்டத்தில் தான் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 41 பேரின் குடும்பங்களையும் தனித்தனி அறையில் தங்க வைத்து, ஒவ்வொரு அறைக்கும் சென்று விஜய் அவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.





















