மேலும் அறிய
TVK Vijay: தவெக மாநாடு இங்கு நடத்த ஒரே காரணம் நான்கு " V " தான்... ரசிகன் வேறு... மக்கள் வேறு... புரிந்துகொள்வாரா விஜய்?
அரசியல் கட்சி என்பது, கட்டி முடிக்கப்பட்ட வீட்டை ரிப்பன் வெட்டி திறப்பது போல் கிடையாது என்பதை விஜய் உணர வேண்டும். ஏனென்றால் ரசிகன் வேறு... தொண்டன் வேறு... மக்கள் வேறு
ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய்
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார், அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 25-01-24 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து படுவேகமாக கட்சியின் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்திய விஜய் முதல் அரசியல் மாநாட்டை எங்கு நடத்தப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
மாநாடு நடத்த ஒப்புக்காக ஒரு முயற்சி
திருச்சியில் மாநாடு நடத்த ஒப்புக்காக ஒரு முயற்சி மேற்கொள்ளபட்டது. உண்மையில் மாநாடு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தான். ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்ட பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை விக்கிரவாண்டி தொகுதியிலேயே நடத்தப்பட்டுள்ளது, அப்படியான நிகழ்ச்சிகளில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
அடிப்படை சிந்தனையை புரந்தள்ளிய தவெக
ஒரு அரசியல் கட்சி, தன் முதல் மாநில மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடும், அதே நேரத்தில் மிக முக்கியமாக தொண்டர்கள் ஒருநாள் பயணத்தில் மாநாட்டில் கலந்துக்கொண்டு விட்டு மீண்டும் ஊர் திரும்ப வசதியாகத்தான் மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்படும். இதன் காரணமாகவே அரசியல் கட்சிகள் தங்களின் பெரும்பாலான மாநாடுகளை தமிழ்நாட்டின மைய பகுதியான திருச்சி அல்லது மதுரையில் நடத்துவது வழக்கம். இந்த அடிப்படை சிந்தனையை புரந்தள்ளிவிட்டு விக்கிரவாண்டியை தேர்வு செய்துள்ளது தவெக தலைமை.
மாநாட்டுக்கான அனுமதி மட்டும் அப்படியே உள்ளது
பல நூறு ஏக்கர் பரப்பளவில் மாநாடுகள் நடத்தப்படும் நிலையில் மாநாட்டுக்கு தேர்வு செய்துள்ள இடம் வெறும் 85 ஏக்கர் மட்டுமே. மாநாடு நடத்த அனுமதி கேட்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 02ஆம் தேதி மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கடிதம் வழங்கியது. இந்த கடிதத்திற்கு பதில் வழங்க 5 நாள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான செப்டம்பர் 6ஆம் தேதி விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக பதிலை புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
8ஆம் தேதி 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்றைய தினம் தான் தேர்தல் ஆணையம் தவெக கட்சியை பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்தது என்பதும் தவெக கட்சியினர் விழுப்புரத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினமே மாநாட்டுக்கான அனுமதி கடிதத்தினை தவெக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் பெற்றுக்கொண்டார். அன்றிலிருந்து சரியாக மாநாட்டுக்கு 16 நாட்கள் இருந்தது. ஆனால் இன்றைய தேதிவரை வரை பணிகள் தொடங்கப்படவில்லை. மாநாட்டுக்கான அனுமதி மட்டும் அப்படியே உள்ளது.
எந்த தகவலும் முக்கிய நிர்வாகிகளுக்கு கிடைப்பதில்லை
தற்போது மாநாட்டு தேதியை அக்டோம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு தொடர்பான எந்த தகவலும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை தெரிவிப்பதில்லை, கட்சி தலைமை விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து விழுப்புரம் வருகிறோம் தயாராக இருங்கள் என மட்டும் தகவல் சொல்லப்படுகிறது, இடம், நேரம் தெரிவிக்கப்படுவதில்லை. நிர்வாகிகள் காலம், நேரம் தெரியாமல் காத்துக்கிடக்க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் விழுப்புரம் நகரத்திற்கு வந்துவிட்டு நிர்வாகிகளை அழைக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஊடகத்தினரின் நிலைமை இதைவிட மோசம். மாநாட்டு பணிகளில் அப்படி என்ன ரகசியம் என்று தான் புரியவில்லை.
மாநாடு நடத்த ஒரே காரணம் நான்கு (வி) தான்
உண்மையில் தவெக விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த ஒரே காரணம் நான்கு (வி) தான். அது என்ன நான்கு "வி" V ?.
விஜய். (வி) V , தமிழக V (வெ)ற்றிக் கழகம். (வி), V விக்கிரவாண்டி. (வி)., V வி.சாலை. (வி). இந்த நான்கு வி-யை தவிர விக்கிரவாண்டியில் மாநாட்டு நடத்த வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான எந்த முன் யோசனையும், முன் தயாரிப்பும் கட்சி தலைமையிடத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு மாநாட்டை நடத்த முதலில் குழு அமைத்து தொண்டர்கள் வந்து செல்ல வசதியான ஊர், மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டு முகப்பு எப்படி இருக்க வேண்டும், மேடையின் அளவு, எத்தனை லட்சம் தொண்டர்கள் வருவார்கள், தொண்டர்கள் அமரும் இடத்தின் பந்தல் அளவு, எத்தனை இருக்கைகள் போட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எவ்வளவு வாகனங்கள் வரும். அதனை நிறுத்துவதற்காக இடம். வாகனங்கள் நெரிசலின்றி வந்து செல்ல வழி. உணவு, கழிவறை என இந்த பட்டியல் இன்னும் நீளும். இப்படி இருக்கும்போது எந்தவித முறையான திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் செட் அமைப்பது போல் மாநாட்டை நடத்திவிடலாம் என விஜய் நினைத்துவிட்டதுப்போல தெரிகிறது.
ஒருநாள் மட்டுமே மாநாடு
கடந்த காலங்களில் அரசியல் கட்சி மாநாடுகள் நான்கு, ஐந்து நாட்கள் நடைபெறும் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் தொண்டர்கள் மாநாட்டின் ஒருநாள் நிகழ்விலாவது கலந்துக்கொண்டு செல்வார்கள். ஆனால் அன்றைக்கு ஒருநாள் மட்டுமே மாநாடு, அதுவும் சில மணி நேரங்கள் தான் அப்படியிருக்க கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்து மாநாட்டில் கலந்துக்கொள்வது இயலாத ஒன்று.
முறையான திட்டமிடல் இல்லை
மாநாட்டுக்கு அனுமதி கேட்டு வழங்கப்பட்ட கடிதத்தில் 1.5 லட்சம் பேர் கலந்துக்கொள்வார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில் எழுப்பூர்வ பதிலில் 50ஆயிரம் இருக்கைகள் மட்டுமே போடப்படும் என கூறப்பட்டுள்ளது முறையான திட்டமிடல் இல்லை என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. இப்படி பல முரண்பாடுகள் ஒருபுறமிருக்க விஜய் நடிகராக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கலாம், ஆனால் தமிழ் சமூகத்திற்கு தேவையான அடிப்படை கொள்கையும், கோட்பாடுள்ள தலைவராக விஜய் முதலில் ரசிகர்களிடம் சென்று சேரவேண்டும். ரசிகரிடம் முழுமையாக சென்று சேறுங்கள், ரசிகர்களை அரசியல்வாதிகளாக தயார்படுத்துங்கள். அப்போதுதான் ரசிகர்கள் ஒரு அரசியல கட்சியின் தொண்டனாக, நிர்வாகியாக வளர்ச்சியடைவார்கள். அப்போதுதான் கட்சி நிலைத்து நிற்கும்.
எம்.ஜி.ஆர், விஜயகாந்த் முன்னுதாரணமாக...!
சினிமாவில் மக்களுக்கு நன்மை செய்வது போல் நடிப்பதும், வசனம் பேசுவதும் மக்களிடம் ஒரு அறிமுகம் மட்டுமே அதுவே வாக்குகளாக மாறாது. எம்.ஜி.ஆர் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் திரைத்துறையில் இருந்து எம்.ஜி.ஆர் நேராக அரசியல் கட்சி துவங்கவில்லை திமுகவில் இணைந்தார் அண்ணாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டார், அரசியல் அறிவு பெற்றார். அதனால் அவர் வெற்றி பெற்றார். ஜெயலலிதா அதிமுகவில் தன்னை இனைத்துக்கொண்டார் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து கட்சிக்கு உழைத்தார் தலைமை இடத்துக்கு வந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவருக்கு பின்னாலும் வலுவான அரசியல் கொள்கை இருந்தது, கடுமையான உழைப்பு இருந்தது.
இதையே விஜயகாந்தும் பின்பற்றினார் அதனால் அவருக்கும் மக்களிடம் செல்வாக்கு இருந்தது. இப்படியான எந்த உழைப்பும், அனுபவமும் இல்லாமல் விஜய் எப்படி வெகு மக்களிடம் சென்று சேறுவார்?. சாதி, மதங்களை கடந்து ஒரு அரசியல் கட்சி திராவிடம், தமிழ்தேசியம், கம்யூனிசம், இந்துத்துவம் போன்ற எந்த சித்தாந்தத்தை பின்பற்றுகிறது என கவனித்தே தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என்பதும், வெறுமனே மக்கள் நலன், லஞ்சம், ஊழல் ஒழிப்பு, அடிப்படை மாற்றம், தலைகீழ் மாற்றம் என்பன போன்ற பொதுவான காரணங்களை சொல்லி அரசியலுக்கு வரும் கட்சிகள் நிலைத்திருக்காது என்பது வரலாற்று உண்மை.
ரசிகன் வேறு... தொண்டன் வேறு... மக்கள் வேறு...
மக்களிடத்தில் சென்று, மக்களிடமிருந்து தலைவனாக மேலெழும்பி வர வேண்டுமே தவிர அரசியலை டியூஷன் சென்டரில் படித்துவிட்டு வருவதும், அரசியல் கட்சி என்பது, கட்டி முடிக்கப்பட்ட வீட்டை ரிப்பன் வெட்டி திறப்பது போல் கிடையாது என்பதை விஜய் உணர வேண்டும். ஏனென்றால் ரசிகன் வேறு... தொண்டன் வேறு... மக்கள் வேறு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion