TVK Campaign Postponed: ஒத்தி வைக்கப்பட் விஜய்யின் மக்கள் சந்திப்பு; மீண்டும் எப்போது பரப்புரை.? தவெக முக்கிய அறிவிப்பு
கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம் காரணமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பரப்புரை மீண்டும் தொடங்குவது குறித்து தவெக கூறியுள்ளதை பார்க்கலாம்.

கடந்த சனிக்கிழமை இரவு, கரூரில் நடந்த விஜய்யின் பரப்புரையின்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாக தவெக தலைமைக் கழகம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன.? இப்போது பார்க்கலாம்.
“2 வாரங்களுக்கு விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு“
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலைய செயலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.“ என்று கூறப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) October 1, 2025
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு…
கரூர் பரப்புரை கூட்டத்தில் நடந்தது என்ன.?
கரூரில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மதியம் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்விற்கு, இரவில் தான் வந்து சேர்ந்தார் விஜய். இந்நிலையில், காலை முதலே அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் திரண்டிருந்தனர்.
ஆனால், விஜய் வருவதற்கு இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இதனால், அந்த சிறிய பகுதியின் கொள்ளளவிற்கு மேல் மக்கள் கூடியிருந்தனர். இதையடுத்து, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலாக மாறியது. விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின.
விஜய்யின் பிரசார வாகனத்திற்கு அருகேயே ஒரு பெண் மயக்கமடைந்த நிலையில், அவருக்கு விஜய்யே தண்ணீர் வழங்கினார். பின்னர் வாகனத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களை கூட்டத்தில் வீசினார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தனது உரையை விஜய் முடித்துவிட்டு கிளம்பினார்.
அவர் கிளம்பிய சில நொடிகளில், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. ஆனாலும், பல மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும்போதே உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி, இரவு முழுவதும் கரூர் பெரும் பரபரப்பானது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்த நிலையில், நள்ளிரவில் புறப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதிகாலையில் அங்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இச்சம்பவத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















