Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
TVK Vijay arrest: விசாரணை ஆணையம், விஜய் மீது தவறு இருக்கிறது. அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தால், அரசும் காவல் துறையும் தங்களின் கடமையைச் செய்யும்- திமுக.

கரூரில் 41 பேர் பரிதாபமாக பலியான நிகழ்வில், ஆணையம் சொன்னால் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ’’விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? அரசும் காவல்துறையும் அவரைக் கண்டு அச்சப்படுகிறதா?’’ என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவரே திமுகவை விமர்சித்தது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவரே விமர்சனம்
இதுபற்றி, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இன்று தனியார் தொலைக்காட்சியிடம் அவர் பேசும்போது, புஸ்ஸி ஆனந்த் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆணையம் அமைத்ததன் நோக்கம் என்ன?
அதற்கு பதிலளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், புஸ்ஸி ஆனந்த் அங்கேயே இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுதான் முறை. ஓர் ஆணையம் அமைத்திருக்கிறார்கள். அந்த ஆணையம் விரிவாக விசாரித்து முழு அறிக்கை அளிப்பதைப் பொறுத்து, அதற்கு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆணையம் அமைத்ததன் நோக்கமே, என்ன நடைபெற்றது என்று தெரிந்து கொள்ளத்தான்.
பாஜகவே விஜயை ஆதரிப்பதை வெகு வெளிப்படையாக காட்டிக் கொண்டார்கள். உடனடியாக எம்.பி.க்கள் குழுவை, தமிழ்நாட்டு அனுப்பி விசாரிக்கச் செய்தார்கள். மணிப்பூருக்கு இப்படி குழு அனுப்பினார்களா? பிரதமரோ, உள் துறை அமைச்சரோ சம்பவ இடத்துக்குச் சென்றார்களா?
விசாரணை ஆணையம் சொன்னால்...
கரூருக்கு 12 மணிக்கு வருவதாகச் சொன்ன விஜய், ஏன் 8 மணிக்கு வந்தார் என்ற கேள்விக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. அதற்குப் பிறகு விமர்சிக்கட்டும். விசாரணை ஆணையம், ’’விஜய் மீது தவறு இருக்கிறது. அவர் கைது செய்யப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தால், அரசும் காவல் துறையும் தங்களின் கடமையைச் செய்யும்''.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.






















