(Source: ECI/ABP News/ABP Majha)
Tvk maanadu: மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை...தவெகவின் பதில் மனுவில் இருப்பது என்ன?
தவெக மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என போலீசார் கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.
விழுப்புரம்: விஜய் மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர்.
காவல்துறை கேள்விக்கு பதில்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 23 ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 28 ஆம் தேதி அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த் நிர்வாகிகளுடன் சென்று மனு அளித்தனர். தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மனுவில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து குறிப்பிடவில்லை என்பதால் மாநாடு நடத்துவதற்கு நடைமுறை ஏற்பாடுகள் குறித்து விளக்கங்களாக 21 கேள்விகள் கடந்த 2 ஆம் தேதி கேட்கப்பட்டு நோட்டீஸ் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்து மூலமாக டி எஸ் பி சுரேஷ் தமிழக வெற்றி கழக பொதுசெயலாளரிடம் வழங்கினர்.
இதற்கான பதில் மனுவை ஐந்து தினங்களுக்குள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டன. இன்றுடன் காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என் . ஆனந்த் விழுப்புரம் வி ஓ சி நகரிலுள்ள டி எஸ் பி அலுவலகத்தில் டி எஸ் பி சுரேஷிடம் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து மனுவாக வழங்கினர்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மாநாடு நடத்த காவல் துறை சார்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளித்து மனு தரப்பட்டுள்ளதால் காவல் துறை அனுமதி வழங்கபின் மாநாடு நடைபெறுவதற்கான அதிகாரபூர்வ தேதியினை விஜய் வெளியிடுவார் எனவும் நல்ல பதில் காவல் துறையிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்பதாக தெரிவித்தார்.
மாநாடு நடத்த கேட்கப்பட்ட 21 கேள்விகளில் 23 ஆம் தேதி மாநாடு நடைபெற அனுமதி வழங்கினால் நண்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறும் எனவும், முதியவர்களுக்கு இருக்கைகள் தனியாக அமைக்கப்படும், என்றும் உணவு மாநாடு திடல் பகுதியிலையே சமைத்து வழங்கப்படும், தண்ணீர் வசதி கழிவறை வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படுமென குறிப்பிட்டுள்ளனர். காவல் துறையினர் 21 விளக்கங்களை பரிசீலனை செய்த பின்னரே மாநாட்டிற்கான அனுமதி கொடுப்பதா ? இல்லையா ? என்பது தெரிவரும் என டி எஸ் பி சுரேஷ் கூறியுள்ளார்.
மாநாட்டிற்கு கலந்து கொள்ளுபவர்களுக்கு இருக்கைகள் விவரம் :-
குழந்தைகளுக்கு அனுமதி இல்லை
ஆண்- 30,000
பெண் - 15000
முதியவர் - 5000
மாற்று திறனாளிகளுக்கு - 500 இருக்கைகள்
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி கடிதம்
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெற கடிதம் அளித்தனர்.