TVK Maanadu: ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..! தவெக மாநாட்டு திடலில் 500 சிசிடிவி கேமரா...
மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு
500 சிசிடிவி கேமராக்கள்
இந்த நிலையில் மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.
150-க்கும் மேற்பட்ட மருத்துவமுகம்
மாநாட்டில் வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கின் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.