TN 12th Results: சபாஷ்... 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை..! குவியும் பாராட்டுகள்..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளார். தான் தேர்ச்சி அடைந்ததற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று மாணவி தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரேயா ஆவராங்காடு பகுதியை சேர்ந்தவர். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணிதம் 58, கணிணி அறிவியல் 59.
தான் தேர்ச்சி பெற்றது பற்றி கூறிய ஸ்ரேயா, ”நான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகள் படித்தேன். இன்று வெளியான தேர்வு முடிவில் நான் 337 மதிப்பெண் வாங்கி உள்ளேன். எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய தலைமை ஆசிரியரும், என்னுடைய வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தான் இந்த சாதனைக்கு காரணம். நான் இந்த பள்ளியில் படித்தபோது என்னை 3-ம் பாலினமாக யாரும் பார்க்கவில்லை. என்னை சக மாணவர்களை போல் ஆசிரியர்கள் பார்த்தார்கள். இது தான் எனக்கு படிப்பதற்கு ஊக்கமாக இருந்தது. நான் இந்த பள்ளியில் படித்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது”
தமிழகம் முழுவதும் வெளியான தேர்வு முடிவு
12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெரிதும் எதிர்பார்த்த பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார். இதில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அடிப்படையில் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு..?
தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 8,03,385
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451
கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு பாடத்தில் அதிக சதம்..!
கடந்த மே 2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 22,957
இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 32,501
அதிலும்,தமிழ் மொழிப்பாடத்தில் 2 மாணவர்கள் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.