டேக் டைவர்சன்.. மெட்ரோ ரயில் வேலையால் மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் RTO அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது.
மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. அது, ஆலந்துார் - சென்னை சென்ட்ரல், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது வரை மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதில் 23 கி.மீ. தூரம் சுரங்கத்திலும் மீதமுள்ள 22 கி.மீ. வழித்தடம் மேம்பாலம் வாயிலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கி.மீ நீளத்தில் 3 வழித்தடங்களுடன் ரூ.61,843 கோடி செலவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, மாதவரம் - சிப்காட் வரை 48. கி.மீ நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்தில் அமையவுள்ள தடத்தில் 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 30 மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையில் 47 கி.மீ நீளத்தில் அமைக்கவுள்ள தடத்தில் 42 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 48 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் RTO அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது.
இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் RTO அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது.
இதனால், 19.10.2021 செவ்வாய் கிழமை முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே 19.10.2021 அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* ஆண்டரசன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.
* ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.
* மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்கடன் சாலை சந்திப்பிலிருந்து பில்கிங்டன சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கனரக வாகனங்கள், கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபன் சாலை (ரயில்வே மருத்துவமனை) போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபன் சாலை வழியாக செல்லலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.