Top 10 News: பேருந்து கட்டணம் உயர்வு, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
ஈரோட்டில் ரூ.1,369 கோடியில் வளர்ச்சி பணிகள்
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் நிகழ்வில், 50 ஆயிரத்து 88 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்டங்களுக்க முதலமைச்சர் அடிக்கல்லும் நாட்டுகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதில்
"தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா ஆழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டு வருகிறது. கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாரா விதமாக நடக்கும் ஓரிரு நிகழ்வுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர். 2019ல் அதிமுக ஆட்சியில் கேரள குப்பை லாரிகளை மக்களே சிறைபிடித்த நிகழ்வு என பல உதாரணங்களைக் கூற முடியும் - தங்கம் தென்னரசு
வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் டிச.22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல். தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விசிகவினர் போரட்டம்
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விசிகவினர், தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டம்.
பேருந்து கட்டணம் உயர்வு
புதுவை பகுதிக்குள் இயங்கும் பஸ்களுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே டவுன் பஸ்களில் ரூ.5 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் இனி ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் தலா ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் அதிகபட்சமாக ரூ.13 ஆக இருந்த கட்டணம்
தற்போது ரூ.17 ஆக உயர்ந்துள்ளது.
ராகுலுக்கு எதிராக நோட்டீஸ்
பாஜக எம்.பிக்களை தள்ளிவிட்டதாக, மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை பெண்
வாஷிங்டன் நியூ ஜெர்சியில் நடந்த 2024 மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தை சென்னையில் பிறந்த, இந்திய அமெரிக்க இளம்பெண் கேட்லின் சாண்ட்ரா பெற்றுள்ளார். 47 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 19 வயதான கேட்லின் மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தைப் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் கேட்லின், மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஜொலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமரசத்திற்கு தயார் என புதின் பேச்சு?
உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் புதின் பேசியதாக கூறப்படுகிறது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த இந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில், இரு தரப்பு டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது
அஸ்வின் நெகிழ்ச்சி
என்னிடம் ஸ்மார்ட் போன் இருக்கும், ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக நான் ஒய்வு பெறும் கடைசி நாளில் எனது Call Log இப்படி இருக்கும் என 25 வருடங்களுக்கு முன் யாராவது கூறி இருந்தால், என் இதயத்துடிப்பே நின்றிருக்கும். சச்சின் மற்றும் கபில்தேவ்க்கு நன்றி!" ஓய்வை அறிவித்தபோது முன்னாள் வீரர்கள் சச்சின் மற்றும் கபில்தேவுடன் தொலைபேசியில் உரையாடியது குறித்து அஷ்வின் பதிவு!