அச்சச்சோ.. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது!
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஒரு கி.மீ.க்கு கார்களுக்கான கட்டணம் தற்போதுள்ள 1.433 ரூபாயில் இருந்து 1.466 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
மத்திய அரசு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் விதமாக சுங்கச்சாவடிகளை அமைத்து வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அமலுக்கு வரும் சுங்கக் கட்டண உயர்வு: இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அத்தியாவசிய பொருட்களின் மீதான விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பொதுமக்களும் இன்னலை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி முதல் நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தால் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், 40க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, அடிப்படை விலையில் இருந்து சுங்கக் கட்டணம் ஆனது 2.55 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த விலைக் குறியீடு உள்பட பல காரணிகளின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
எவ்வளவு ரூபாய் உயர்கிறது? இதன் விளைவாக, ஒரு கிலோமீட்டருக்கு கார்களுக்கான கட்டணம் தற்போதுள்ள 1.433 ரூபாயில் இருந்து 1.466 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. ஒரு வாகனத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கிறது.
மற்ற வகை வாகனங்களுக்கான கட்டணம் வாகன வகையைப் பொறுத்து 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்பட உள்ளது. மாதாந்திர பாஸ்களும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர உள்ளது.
விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), கொடைரோடு (திண்டுக்கல் புறவழிச்சாலை - சமயநல்லூர்), மணவாசி (திருச்சி-கரூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (புதுச்சேரி-திண்டிவனம்) உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வருகிறது.
கோவையில் இருந்து சேலம் வழியாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் பிற தெற்கு அல்லது டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு ஒரு பயணத்திற்கு ரூ.200 முதல் 300 வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2020-21 கொரோனா பொது முடக்கத்தின்போது மாநிலத்தின் வருடாந்திர சுங்கவரி வருவாய் ரூ.2,288.13 கோடியாக இருந்தது.
ஃபாஸ்டாக் மூலம் கட்டாய சுங்க வசூல் அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் சுங்கக்கட்டணத்தால் கிடைக்கும் வருவாய் அதிகரித்து. கடந்த 2021-22ல் ரூ.2,649.35 கோடியாகவும், அடுத்த ஆண்டில் ரூ.3,758.23 கோடியாகவும் உயர்ந்தது.