Heavy Rain: பகலில் வெயில்.. இரவில் கனமழை.. சென்னைக்கு என்னதான் ஆச்சு? .. குழப்பத்தில் மக்கள்..
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொதுவாக கோடை காலம் நிறைவுற்ற நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் முதல் 10 நாட்கள் வெயில் சுட்டெரித்தது. இதனால் மே மாதம் மப்டியில் வந்ததாக சமூகவலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு இணையவாசிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இப்படியான நிலையில் நேற்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் கடந்த சில நாட்களாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை சிறிதுநேரம் இலேசான மழை பெய்த நிலையில் இரவு 7 மணிக்கு மேல் ஆங்காங்கே விட்டு விட்டு கனமழை பெய்ய தொடங்கியது. இது நள்ளிரவு வரை நீடித்தது. சென்னை மாநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை, கிண்டி, ராயப்பேட்டை, மெரினா, கோடம்பாக்கம், மயிலாப்பூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஆங்காங்கே சிறிது நேரம் தண்ணீர் தேங்கியது. அதேசமயம் வெப்பம் நீங்கி குளிர்ச்சியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள நேற்று வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘தெற்கு மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளில் தினசரி இரவு நேரம் மழை பெய்து வருகிறது. புதிய புயல் உருவாகினால் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யலாம்” என தெரிவித்திருந்தார்.