TN Rains: 7 மணி வரை குடையோட இருங்க.. 21 மாவட்டங்களில் மழை இருக்கு - நம்ம ஊரு எப்படி?
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வரும் 27ம் தேதி மோன்தா புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
7 மணி வரை மழை:
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் பிறந்தது முதலே தொடர்ந்து மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, இந்த மாதம் இயல்பைக் காட்டிலும் அளவுக்கு அதிகமான மழை பெய்து வருகிறது.
வட கிழக்குப் பருவமழை தீவிரம்:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து மழை தீவிரமாக அடைந்து வருகிறது. இதையடுத்து, அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்கும் இடங்களிலும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளிலும் அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூர்வாரப்படாத கால்வாய்களை மும்முரமாக தூர்வாரி வருகின்றனர். மேலும், ஏரிகள், அணைகள் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
சென்னையிலும் அவதி:
சென்னையைப் பொறுத்தமட்டில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஏற்கனவே சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேசமயம், அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரும் சூழலில், அமைச்சர்களுக்கும் அவரவர் மாவட்டத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















