TN urban Local body polls: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: டெபாசிட் இழந்த அரசியல் கட்சிகள் - பாஜகவை முந்திய நாம் தமிழர்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அனைத்து மாநகராட்சியையும் கைப்பற்றி இருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணி அதிகமான இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.
இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் திமுக 43.59 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. அதிமுக 24 சதவிகித வாக்குகளை பெற்றது. பாஜக 7.17% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 3.16% சதவிகித வாக்குகளையும் பெற்றது. அதேபோல் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக 43.49%, அதிமுக 26.86%, பாஜக 3.31%, காங்கிரஸ் 3.04 % வாக்குகளையும் பெற்றன. பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக 41.91%, அதிமுக 25.56%, பாஜக 4.30%, காங்கிரஸ் 3.85 % வாக்குகளையும் பெற்றன.
இந்நிலையில் சென்னை தவிர மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு தொடர்பாக தி இந்து நாளிதழ் தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி
20 நகர்ப்புற மாநகராட்சிகள் கட்சிகளின் செயல்பாடு:
கட்சிகள் | போட்டியிட்ட இடங்கள் | வெற்றி பெற்ற இடங்கள் | இரண்டாம் இடம் பிடித்த இடங்கள் | டெபாசிட் இழந்த இடங்கள் | வாக்கு சதவிகிதம் |
திமுக | 953 | 799 | 136 | 4 | 42.9 |
அதிமுக | 1162 | 149 | 696 | 343 | 25.5 |
காங்கிரஸ் | 106 | 60 | 28 | 11 | 3.0 |
பாஜக | 935 | 21 | 76 | 822 | 6.8 |
நாம் தமிழர் | 915 | 0 | 1 | 914 | 2.0 |
பாமக | 374 | 5 | 14 | 350 | 1.2 |
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 915 இடங்களில் 1 இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. அதேபோல் 20 மாநகராட்சிகளில் பாஜக போட்டியிட்ட 935 இடங்களில் 822 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. மேலும் மாநகராட்சிகள் மத்திய மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. அதிமுக மேற்கு மாவட்டங்களில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. பாஜக தெற்கு பகுதிகளில் அதிக வாக்கு சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது.
திமுகவை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமான வாக்குசதவிகிதத்தை பதிவு செய்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூரில் அதிக வாக்கு சதவிகித்தை பெற்றுள்ளது. பாஜகவை பொறுத்தவரை அதிகபட்சமாக நாகர்கோவிலில் அதிக வாக்கு சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது.
திமுகவிற்கு 11 மாநகராட்சியில் 40 முதல் 49% வாக்குகள் பதிவாகியிருந்தன. 5 மாநகராட்சிகளில் 30 முதல் 39% வாக்குகளை பெற்றுள்ளது. 2 இடங்களில் 20-29% வாக்குகளை திமுக பெற்றுள்ளது. திமுக குறைந்தபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 25.9% வாக்குகளை பெற்றுள்ளது. அங்கு திமுக மொத்தம் இருந்த 60 வார்டுகளில் வெறும் 35 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது வாக்கு சதவிகிதம் குறை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்