TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை?
TN Rain Update: வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக, சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
TN Rain Update: அரியலூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு, இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:
வானிலை மையத்தின் அறிக்கையில், ”தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தொடர்ந்து வலுபெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலைகொள்ளக் கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை:
அதன்படி, இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
ஆரஞ்சு அலெர்ட்
15.10.24: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
ரெட் அலெர்ட்:
16.10.24: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
மஞ்சள் அலெர்ட்:
17.10.24: ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக அதிகரித்து, 15 மற்றும் 16 தேதிகளில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும். இதனால் அந்த தேதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை விலகி 15, 16ம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது எனவும் மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள், மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.