TN Rain Alert: விஜயின் தவெக மாநாட்டிற்கு தடையாக வருமா மழை? தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
TN Rain Alert: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் போது மழை வரவாய்ப்புள்ளதா என்பது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
27.10.2024 முதல் 30.10.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024 முதல் 01.11.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை & புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
27.10.2024 முதல் 30.10.2024 வரை; எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுங்கள்.
26.10.2024 முதல் 30.10.2024 வரை; எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்
27.10.2024 முதல் 30.19.2024 வரை எச்சரிக்கை ஏதுமில்லை” என மண்டல வானிலை மையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டின் போது மழையா?
மண்டல வானிலை மையத்தின் அறிக்கையின் படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இன்று கனமழை பொழிய வாய்ப்பில்லை. இது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் விஜய் தலைமையிலான முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள வி. சாலையில் இன்று நடைபெற உள்ளது. திறந்தவெளியில் மாநாடு நடைபெறுவதால், மழை வந்தால் இதுவரை செய்யப்பட்ட பிரமாண்ட ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகிவிடுமே என தவெக நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று மழைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டு இருப்பது தவெகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரமாண்ட ஏற்பாடுகள்:
இன்று மாலை 4 மணிக்கு தவெக மாநாடு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக சுமார் 100 அட் உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுவார் என்றும், 6 மணியளவில் தனது பேச்சை தொடங்கி கட்சி கொள்கைகள் மற்றும் கொடி தொடர்பான விளக்கங்களை அளிப்பது என 2 மணி நேரம் ப் பேசுவார் எனவும் கூறப்படுகிறது. இதற்காக சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் தொண்டர்களுக்கு வழங்க சிற்றுண்டிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மருத்துவ குழுக்கள், நடமாடும் கழிவறைகள், தண்ணீர் தொட்டிகள் போன்ற அடிப்படை வசதிகளும் அங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறைந்தது சுமார் 2 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

