TN Rain Alert: 6 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வழக்கமான வெயிலின் தாக்கம் கூட இல்லாமல் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகள், தென் தமிழக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. குறிப்பாக குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்
08.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.07.2023 மற்றும் 11.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.07.2023 முதல் 10.07.2023 வரை: வங்கக்கடல் பகுதியில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதேபோல் அரபிக்கடல் பகுதியில் இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.