TN Minister meet Governor: நாங்க போகமாட்டோம்.. ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு! விவரம் சொன்ன அமைச்சர்!
நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் சந்தித்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் இன்று மாலை தேநீர் விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தை சிபிஐ, சிபிஎம், விசிக, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சகர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் சந்தித்தனர். இந்தச் சந்திபிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12ஆவது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இந்த அடிப்படையில்தான் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு தீர்மானம் கடந்த செப்.13ஆம் தேதி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்டத்தை தொடர்ந்து மீண்டும் சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை; கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் தரக்கோரி ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். இந்தமசோதாவை அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் ஆளுநர் உறுதி அளித்து இருந்தார். ஆனால் உறுதி அளித்த பிறகும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் டெல்லிக்கு சென்ற முதல்வர் பிரதமரிடம் இதுகுறித்து சுட்டிக்காடி பேசினார். 208 நாட்கள் கடந்த நிலையில் ஆளுநர் அச்சட்டத்திற்கு அந்த ஒப்புதலை அளிக்காத நிலையில் சட்டமன்ற மாண்புகள் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நானும் மா.சுப்பிரமணியனும் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தினோம். நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநர் எந்த உறுதியையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆகவே இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்து, பாரதி சிலை திறப்பு விழாவையும் தமிழ்நாடு அரசு பங்கேற்காது.
மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்பது, நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையின் மாண்பினை குழைக்கும் வகையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதால் அதனை புறக்கணிக்கிறோம்”எனக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்