Gold loan waiver : நிலுவையில் உள்ள நகை கடன்கள், 100 சதவீதம் ஆய்வு செய்யப்படும் - தமிழ்நாடு அரசு
கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக 5 சவரனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட பொது நகை கடன்களை ஆய்வு செய்ய குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலான் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், " கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, 5 சவரனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், நகை கடன்கள் வழங்கியதில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம். கூட்டுறவு நிறுவனங்களில் நடப்பாண்டு மார்ச், 31 வரையிலான நிலுவை கடன்கள்; ஏப்., 1 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான ஆய்வு குழுவில், கூட்டுறவு சார் பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், நகை மதிப்பீட்டாளர் போன்ற உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்.
இந்த குழுக்கள் ஆய்வு பணியை, நவ., 15-க்குள் முடித்து, சரக துணை பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, இருது அறிக்கை நவம்பர் 20க்குள் மண்டல இணை பதிவாளர் வாயிலாக, பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதி: கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து கூட்டுறவு நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வில், கடந்த அதிமுக அரசின் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களுக்கான நகை கடன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள், தொகை, கடன் கணக்கு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு பகுப்பாய்வு செய்ததில், கண்டறியப்பட்ட விதி மீறல்களில் சில.....
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில், ரத்தன் லால், அவரது மனைவி சுந்தரி பாய், மகன்கள் ராஜ்குமார், தன்ராஜ் மற்றும் மருமகள்கள் கான்கி தேவி, மஞ்சு என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்கள். இவர்கள் மொத்தம் 1685 எண்ணிக்கையிலான நகைக் கடன்கள் மூலம் ரூ.4.72 கோடியினை முறைகேடான வழிகள் மூலம் கடனாகப் பெற்றுள்ளனர்.
அதே போல கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மிகவும் வறியவர்களுக்கான அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட அட்டை வைத்திருப்பவர்களின் பெயரிலும் நூற்றுக்கணக்கான கடன்கள் மூலம் பல கோடிகள் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து முறைகேடான வழிகளில் கடன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இன்னும் சில கூட்டுறவு கடன் சங்கங்களில் போலி கவரிங் நகைகளை வைத்தும் நகைளையே வைக்காமலும் கடன் வழங்கப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப் பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.