Online Rummy Ban: 44 உயிர்கள் பறிபோன பிறகும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - குவியும் கண்டனங்கள்
Bill to Ban Online Gambling: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டம் (online rummy and gambling) நாடு முழுவதும் பெரிய பிரச்னையை கிளப்பி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்தும், அதனை தடை செய்யவும் அவசர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர்:
அதன்பிறகு, அக்டோபர் 19 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடைக்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. மசோதா சட்டமாக வேண்டும் என்றால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், 5 மாதங்களை கடந்தும் அதற்கு அவர் ஒப்புதல் வழங்கவில்லை.
அவசர சட்டம்:
ஆனால், அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பின் கூடும் சட்டசபை நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அதன்படி ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கு அதாவது சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை ஏன் தடை செய்ய வேண்டும், இந்த சட்டத்தை ஏன் அமல் படுத்த வேண்டும் என விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர்.
அதற்கு தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்தது. இதனிடையே டிசம்பர் 2 ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி(Online Rummy) உள்ளிட்ட விளையாட்டுகளை தமிழ்நாட்டில் தடை செய்வதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழ் நாட்டு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
தொடரும் தற்கொலைகள்:
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையிலும், தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருப்பது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டப்பேரவையில் மாநில அரசு தயாரித்த அறிக்கையை வாசிக்காதது உள்ளிட்டவை தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கிடையேயான பிரச்னையை உச்சக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.
பின்னர், ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றது மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால், தற்போது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்திருப்பது பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளது.