PTR Emotional Letter: பெற்றோர், பிள்ளைகள் உறவு போலத்தான் இந்த தொழில்நுட்ப அணி செயலாளர் பொறுப்பும்... அறிக்கைவிட்டு விடைபெற்ற பிடிஆர்..!
எனது இந்த பொறுப்பு விலகல் குறித்து யாரும் வருந்த வேண்டாம் எப்படி பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவானது எக்காலமும் நீடிக்கும் - அமைச்சர் பிடிஆர்
தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அவர்கள் அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அக்கட்சியின் கழக தலைவர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களின் விடைபெறும் மடலும் கழகத்தின் கண்ணியத்துடன் நல்லதொரு மரபாக அமைந்துள்ளது!
— இசை (@isai_) January 21, 2022
அவர் உருவாக்கிய அணியின் நிர்வாகப் பண்பாடு அண்ணன் @TRBRajaa அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் மென்மேலும் சிறப்படைந்து கழகத்தின் இன்றியமையாத தூணாக என்றும் விளங்கும்! 😊🙏🏽 pic.twitter.com/rGvnHNZn2i
இதையடுத்து, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களை அந்த பதவியில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக திரு.டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், பதவியில் இருந்து விலகியது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்து நான் விலகியது குறித்து வருத்தத்தையும், இதுவரை நான் ஆற்றிய பணிக்கு நன்றியையும், எனது எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களையும் பலரும் வெளிப்படுத்தி வருகிறீர்கள். நான் அக்கறை செலுத்திய பலரும் இன்றும் என் மீது அன்பு கொண்டுள்ளனர் என்பதை பார்க்கும்போது, நான் உண்மையில் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.
எனது இந்த பொறுப்பு விலகல் குறித்து யாரும் வருந்த வேண்டாம் எப்படி பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவானது எக்காலமும் நீடித்திருக்கிறதோ, அதே போல நமது பிணைப்பும் நிரந்தரமானது. 2017ம் ஆண்டு ஜூன் மாதம், ஆரம்பத் திட்டம் கூட இல்லாத நிலையிலிருந்து இன்று தனித்துவம் மிக்க வலுவான ஒரு அணியை கட்டமைத்து வழிநடத்திய ஒருவராய் நான் என்றுமே திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஓர் அங்கமாகவே இருப்பேன், இந்த அணியும் என் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கும் என்றும், எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதன்முதலாக அதிமுக கட்சி தொடங்கியது. 2014ஆம் ஆண்டு அதிமுக இதை தொடங்கியது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் திமுகவும் 2017ஆம் ஆண்டு தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கியது. அப்போது முதல் அந்த அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார். திமுக ஆட்சிக்கு வர இந்த தொழில்நுட்ப பிரிவும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனினும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தொழில்நுட்ப பிரிவில் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இந்தப் பிரிவிற்கு புதியவரை செயலாளராக நியமித்து மீண்டும் அதன் முழு செயல்பாட்டை பெற அக்கட்சி திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரின் பொறுப்புக்கு தற்போது டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்