பெல்ஜியம் வேண்டாம், இந்தியாவே என் சொந்த நாடு - யார் இந்த ஜியான் ட்ரெஸ் ?
சமூகமும் தெரியும், பொருளாதாரமும் புரியும் - ஜியான் ட்ரெஸ்ஸை தமிழகத்தின் பொருளாதார ஆலோசனை குழுவில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
மோடி அரசு 2024ல் 5 ட்ரில்லியன் டாலர் எகானமியை குறிவைப்பதாக தெரிவித்தபோது, இது இந்திய அரசின் வல்லரசு ஆக வேண்டும் என்ற ஆசையை மட்டுமே வெளிப்படுத்துகிறது, இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மக்களின் நல்வாழ்வு குறித்து எந்த நோக்கமும் இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை என ஒரு இந்திய பொருளாதார நிபுணர் பகிரங்கமாக தெரிவித்தார், அவர் தான் ஜியான் ட்ரெஸ்.
பெல்ஜியம் தான் இவரின் சொந்த நாடு, ஆனால் இந்தியாவில் வாழ்வதே எனக்கு உற்சாகம் என்று தெரிவித்த ஜியான் ட்ரெஸ், தனது பெல்ஜியம் நாட்டு குடியுரிமையை துறந்து, இந்தியாவில் குடியேறினார். இவரின் தந்தை ஜாக்ஸ் ட்ரெஸ் உலகின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர், ஆராய்ச்சி மற்றும் சுற்றுசூழல் அளவியல் செயல்பாட்டு மையத்தின் நிறுவனராகவும் பதவி வகித்தவர். தாய் ட்ரெஸ் பீர் ஒரு சமூக உணர்வாளர், இப்படி பட்ட குடும்ப சூழலில் வளர்ந்த ஜியான் ட்ரெஸ் தந்தை மூலம் பொருளாதார வாழ்வியல், தாய் மூலம் சமூக சேவை இரண்டையும் உறுதியாக பிடித்து கொண்டார்.
அந்த உறுதியுடன சமூகநீதி என்ற கொள்கையை பிடித்துக்கொண்ட ஜியான் ட்ரேஸ் தன் வாழ்நாள் முழுவதும் பசி, பட்டினி, வறுமை, பாலின ஏற்றத்தாழ்வு, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி ஆகியவற்றை ஆராய்ந்து அதன் மீதான தனது விசாலமான பார்வையை முன்வைத்தார்.
1980ல் கணித பொருளாதாரத்தில் பட்ட படிப்பை மேற்கொண்ட ஜான், தனது வீட்டிலிருந்து வெளியேறி லண்டனில் வீடு இல்லாத ஆதரவற்ற மக்களுடன் சென்று தங்கினார். 1988ம் ஆண்டு இந்த ஆதரவற்ற மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு இயக்கமாக அவர்கள் செயல்பட உதவினார். அன்று முதல் ஆடம்பர வாழ்க்கை என்பதை முற்றிலுமாக துறந்த ஜியான், ஆதரவற்ற மக்கள் எங்கிருக்கிறார்களோ, அதையே தனது கூடாரமாக மாற்றிக்கொண்டார். தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஜியான் ட்ரெஸ், சேரி குடிசை பகுதியில் தான் தன்னுடைய மனைவி பெலா பாட்டியா உடன் வாழ்ந்து வருகிறார்.
தனது 20வது வயதில் 1979ல் இந்தியாவிற்கு வந்த ஜியான் ட்ரெஸ், 2002ம் ஆண்டு இந்திய குடியூரிமையை பெற்றார். 1990 முதல் இந்திய அரசுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டார்.
- இந்தியாவில் NREGA என சொல்லப்படும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் 2005 உருவாக்கப்பட்டதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ஜியான் ட்ரெஸ். அது கிராமப்புறங்களில் முறையாக செயல்படுகிறதா என்று இன்றும் கண்காணித்து வருகிறார்.
- இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உருவாக்க முக்கியமான ஆலோசனைகலை வழங்கியவர் ஜியான் ட்ரெஸ்
- இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படுவதிலும் மிக முக்கியமான ஆலோசனைகளை வழங்கி பங்குவகித்தவர்.
ஒரு பக்கம் இப்படி இந்திய பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பின் குரலாக ஒலிக்கும் ஜியான் ட்ரெஸ், மறுபக்கம் லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், டெல்லி ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், அலகாபாத்தில் உள்ள ஜிபி பந்த் சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் வருங்காலத்தை பட்டை தீட்டும் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். மேலும் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இப்படி இந்திய அளவில் இவரின் பங்களிப்பு பறந்து விரிந்திருக்க, உலக அளவில் ரைட் to information எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உருவாக்க, அது நம் உரிமை என்னும் பிரேச்சாரத்தை வீரியமாக முன்னெடுத்து சென்றவர். மேலும் 1990 ஈராக் போர் நடைபெற்ற போது, ஈராக் - குவைத் எல்லையில் அமைதி முகாமில் இணைந்து, அமைதியை நிலைநாட்ட செயல்பட்டவர். அப்போது ஜியான் ட்ரெஸ் எழுதிய புத்தகம் "ஈராக்கின் பசி மற்றும் வறுமை" தான் வளைகுடா போருக்கு பின் ஈராக் பொருளாதாரத்தை உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும் அமர்த்தியா சென் உடன் இனைந்து இந்தியாவின் கல்வி சுகாதாரம் சார்ந்த "Uncertain glory" என்னும் புத்தகம் மிக பிரபலமானது. இப்படி சமூகம் சார்ந்த எண்ணற்ற புத்தங்களை ஜியான் ட்ரெஸ் எழுதியுள்ளார்.
கருத்துகளை சொல்வதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், சமூக நீதிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடவும் இவர் தயங்கியதில்லை. அதனால் ஜியான் ட்ரெஸ் எகானாமிஸ்ட் மட்டும் இல்லை இவர் ஒரு ஆக்ட்டிவிஸ்ட்டும் கூட. அதுவே இவரின் வாழ்க்கை அனுபவங்களை தனித்துவமாக்குகிறது. இந்நிலையில் தான் சமூகமும் தெரியும், பொருளாதாரமும் புரியும் எனும் ஜியான் ட்ரெஸ்ஸை தமிழகத்தின் பொருளாதார ஆலோசனை குழுவிற்கு அழைத்துள்ளார் ஸ்டாலின். கொரோனா பிடியில் சிக்கி, 5.6 லட்சம் கோடி கடனில் தவிக்கும் தமிழ்நாடு அரசின் பொருளாதாரத்தை ஜியான் ட்ரெஸ் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில்.