MK Stalin Speech: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழியை அழிக்கப்பார்க்கிறது பாஜக - முதல்வர் ஸ்டாலின்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று திருவள்ளூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியதாவது, ”ஒவ்வொரு தமிழரும் நினைவு கூறவேண்டிய தினம் மொழிப்போர் தியாகிகள் தினம். மொழிப்போர் தியாக வரலாறை திரும்ப திரும்ப சொல்வது தமிழினம் தாழ்ந்து விடக்கூடாது என்பதற்கு தான். தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் மொழிப்போர் தியாகிகள் ஆவர். மொழிக்காக தங்களது தேக்கு மர தேகத்தினை தீக்கு தின்னக் கொடுத்தவர்கள் திமுக தொண்டர்கள்” எனவும் அவர் பேசியுள்ளார்.
View this post on Instagram
மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழியை அழிக்கப்பார்க்கிறது பாஜக. உலகமும் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வருவதற்கு தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கை தான் காரணம். தமிழினத்துக்கு எதிரான சக்திகள் தேர்தல் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
இன்றைய மொழிப்போராட்டம் என்பது, இந்தியாவை ஆள இந்திமொழிக்குத்தான் தகுதி இருக்கிறது என்ற பா.ஜ.க.வின் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டம்!
நமது பண்பாட்டைச் சிதைத்து இன்னொன்றைத் திணிக்கும் நோக்கம் கொண்டவர்கள் பின்வாங்கி இருக்கிறார்களே தவிர - நாம் எந்தக் காலத்திலும் பின்வாங்கியது இல்லை! வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழினம் பகுத்தறிவுக் கருத்துகளால் இனமான - மொழி உணர்ச்சி பெற்று, வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூரும் நாள்தான், இந்த வீரவணக்க நாள்!
ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்தி ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து, தமிழ் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து உயிரையும் விலையாய்க் கொடுத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள், இந்த நாள்!
1938-ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் கைதாகி 1939-இல் சிறையில் மறைந்த நடராசனும், தாளமுத்துவும் - 1965-ஆம் ஆண்டு, தூக்கி நின்ற துப்பாக்கிக் குண்டுக்கு, மார்பு காட்டிக் காவல்துறைக்கு முன்னால் நின்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படையில் சிவகங்கை இராசேந்திரனும் - 1965 மற்றும் 1966-ஆம் ஆண்டுகளில் தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீயால் எரித்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, ‘மாணவமணி’ மயிலாடுதுறை சாரங்கபாணி போன்றோரும் - அமுது அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த கோவை பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - இன்றைக்கும் படங்களாக நம் முன்னால், நம்முடைய உணர்வுகளில் நிறைந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய தியாகிகளை நமது முன்னோடிகளாக நாம் பெற்றிருக்கிற காரணத்தால்தான் இன்றுவரை மொழியைக் காப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.