Happy Birthday MK Stalin: கர்ஜிக்காமலேயே கவனிக்க வைத்த சிம்ம சொப்பனம்... பிறந்த நாளில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கடக்கும் பாதை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மாநில சுயாட்சி கேட்பது என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமான குரல் அல்ல. இந்தியா முழுமைக்குமான குரல். மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பேசியதால் தான் கலைஞர் தேசிய அளவிற்கான தலைவராக உயர்ந்தார். பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு வந்த போது கூட என் உயரம் எனக்குத் தெரியும் என்று ஒதுங்கிக்கொண்டார். அதேபோன்றதொரு சூழல் மீண்டும் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. அண்ணா காலத்தில் தொடங்கிய சுயாட்சி முழக்கம் ஸ்டாலின் காலம் வரை தொடர்கிறது. ஜிஎஸ்டி நிலுவையை கேட்பது முதல்- கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது வரை மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்தே தான் குரல் கொடுக்கிறது தமிழ்நாடு. தன் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து சிந்திக்கும், போராடும் அண்ணாவின், கலைஞரின் வழித்தடத்தை தொடர்வதால் ஸ்டாலினும் தேசிய அளவிற்கான தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றே கூறலாம். மாநில சுயாட்சிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் எழும் முதல் குரல் ஸ்டாலினுடையதாகதான் இருக்கிறது.
சமூக நீதி தான் திராவிட இயக்கத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் இருந்தும் வழுவாமல் செல்கிறார் ஸ்டாலின். சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை-முழுப்பயனைக்கூட அல்ல- சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும் என்றார் அண்ணா. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததன் பின்னால் திமுகவின் நீண்ட சட்டப்போராட்டம் தான் இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. நீட் தேர்வு வேண்டாம். அது சமூக நீதிக்கு எதிரானது என்பதை ஆரம்பம் முதலே கூறிவரும் திமுக, தற்போது வரை அதில் விடாப்பிடியாக இருக்கிறது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, மாநில சுயாட்சி பாடம் எடுத்திருக்கிறார்.
அனைவருக்கும் சமமான பொருளதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்பதுதான் சமூகநீதி. அனைவருக்குமான சமவாய்ப்புகள் என்பதன் மூலம் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை அடைய முடியும் என்று கூறிய ஸ்டாலின், நாடு முழுவதும் சமூகநிதிக் கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் `அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கி இந்தியா முழுவதும் உள்ள 37 அரசியல் தலைவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
நாட்டையே ஆளும் மத்திய அரசின் தலையீட்டை தடுப்பது தான் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவால். மாநில அரசுக்கு மத்திய அரசால் இடையூறு ஏற்படும்போதெல்லாம் அதை துணிவுடன் எதிர்த்திருக்கிறது திமுக. ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் எதற்கு என்று அண்ணா காலத்து திமுக ஆரம்பித்து வைத்தது முதல் கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா என்று ஆளுநரை எச்சரிப்பது வரை மாநிலத்தில் ஆளுநருக்கான இடம் எது என்பதை ஸ்டாலின் காலத்து திமுகவும் சுட்டிக்காட்டியே வருகிறது.
அதே போல மத்திய அரசின் எதேட்சதிகார போக்கிற்கு எதிராக எழும் முதல் குரலும் தெற்கிலிருந்து தான் ஒலிக்கிறது. இந்திராகாந்தி எமெர்ஜென்ஸியை கொண்டுவந்தபோது அதை எதிர்த்து ஆட்சியை இழந்த வரலாறு திமுகவினுடையது. அந்த துணிவை பார்த்து வியந்தவர்தான் இந்திராகாந்தி. அதே துணிவோடு தான் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் முதல் சிஏஏ வரை அனைத்தையும் எதிர்க்கிறார் ஸ்டாலின். காஷ்மீர் மீதான அடக்குமுறையை எதிர்ப்பது முதல், ஹதராஸில் நடக்கும் சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது வரை திமுகவின் குரல் ஒலிக்கிறது. கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் திமுக பேசுகிறது. மாநிலத்திற்காக மட்டுமல்ல நாட்டின் நலனுக்காகவும் சிந்திக்கும் இயக்கமாக இருந்திருக்கிறது திமுக. இந்தியாவிற்கு ஒரு பிரச்சனை வந்த போது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு இந்தியாவை ஆதரித்தார் அண்ணா. அதே போல தான் இந்தியாவை ராட்சத பலத்தோடு ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று பாஜக அல்லாத தலைவர்களை ஒன்று திரட்ட ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்.
கலைஞர் இருந்த வரை, ஸ்டாலினை ஒரு நல்ல நிர்வாகி ஆனால் நல்ல தலைவரா என்று தெரியாது என்ற விமர்சனம் அவர்மீது இருந்தது. ஆனால், ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் என்று எழுதும் அளவிற்கு இருந்த கட்சியை, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பிற்கு கொண்டுவந்திருக்கிறார். அண்ணாவைப் போல, தன் தந்தை கலைஞரைப் போல தான் ஒரு நல்ல நிர்வாகி மட்டுமல்ல நல்ல தலைவரும் கூட என்பதை நிரூபித்திருக்கிறார். தன் செயல்பாடுகளால் தமிழ்நாட்டிற்கு மட்டுமானவராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவராக ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்பதே நிதர்சனம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்