தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை..
தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றிபெற்று திமுக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார். இந்தச் சூழலில் அவரை நேற்று முதல் அரசின் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "கொரோனா தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
#COVID19 தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021
தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன்.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும். pic.twitter.com/LL4ml4og4i
மேலும் இக்கூட்டத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு அரசு ரெம்டெசிவிர் மருந்தை அளிப்பதைப்போல் மற்ற பகுதிகளிலும் இம்மருந்தை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் தற்போது நோய் தொற்று அதிகரித்து வருவதால் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.