TN Budget 2021: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் - உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கப்படும்
2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதியமைச்சார் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கென முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை ஆற்றிய நிதியமைச்சர், “இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை, 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும். பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயில் இருந்து,5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கினைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, 1-1-2020, 1-7-2020, 1-1-2021 ஆகிய நாட்களிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது
தற்போது, மத்திய நிதி அமைச்சகத்தின் 20-7-2021 நாளிட்ட ஆணையின் வாயிலாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி, அதனை 1-7-2021 முதல் ரொக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
இதனைப் பின்பற்றி உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகா, புதுச்சேரி அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில், நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் எனப் பட்டியலிட்டு, நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும்போது, தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு அதிகமாகவும், டீசல் விலை 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையில், அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்கின்ற சூழ்நிலையில், மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில், தங்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப் படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-07-2021 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.