நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் : சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு
சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் இறுதி நாளில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுகள் நாளை (12/09/2021) நடைபெற இருக்கின்றன.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் வருகின்ற 13 செப்டம்பர் அன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் இறுதி நாளில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அதன் மீதான மானியக் கோரிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் உள்ளாட்சி தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட தேதிக்கு ஒருவாரம் முன்னதாகவே பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதற்கிடையே துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கூட்டத்தொடர் வருகின்ற 13 செப்டம்பர் அன்று நிறைவடைய இருக்கிறது.
மத்திய அரசின் நீட் தகுதித் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதை தங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு அம்சமாகக் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக் குழு ஒன்றையும் நியமித்தது. குழு தனது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கிடையே தற்போது ரத்து செய்வது குறித்த தீர்மானத்தை அரசு சட்டமன்றத்தில் இயற்ற உள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராகவும் அண்மையில் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு ரத்து செய்யவேண்டும் என தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டது. வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான் வரிசையில் 7வது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசின் மூன்று சட்டங்களும் கூட்டாச்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக முதலமைச்சர் தீர்மானத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவின் நான்கு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மாநில அரசு உள்நோக்கத்தோடு இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எதிரானதாக இந்தத் தீர்மானம் இருப்பதாகவும் வெளிநடப்பு செய்த பாரதிய ஜனதா உறுப்பினர் கூறியிருந்தனர். வேளாண் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்துக்கு காங்கிரஸ், பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
தற்போது அடுத்ததாக நீட் தேர்வுக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவர இருக்கும் நிலையில் பேரவையில் பிற கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதும் கவனிக்க வேண்டியதாகியுள்ளது.