TN Assembly Session: நடப்பு நிதியாண்டிலேயே 1,600 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
TN Assembly Session : நடப்பு நிதியாண்டில் 2 ஆயிரத்து 200 கோடி மதிப்பீட்டில் 1,600 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 45 கி.மீ நீளமுள்ள சாலைகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ளன. மேலும், 2016-2017ம் ஆண்டிற்கு பின்பு மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளச் சாலைகள் உள்ளன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், பாதுகாப்பான வாகனப் போக்குவரத்திற்கும் நல்ல சாலைகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்திலேகொண்டு. பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கூறிய பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்காக, தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டு,
ஆயிரத்து 600 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.
இதுதவிர, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, 7 ஆயிரத்து 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமானது கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை 2020-2021 காலத்தில் நாளொன்றுக்கு 70 இலட்சமாகக் குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டது. கொரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் கழக அரசு சீர் செய்த பிறகு இப்போது நாளொன்றுக்கு ஒரு கோடியே 70 இலட்சம் பேராக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அரசின் மிகச் சிறந்த சேவைத் திட்டமான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதியின் மூலமாக மகளிர் நாளொன்றுக்கு சராசரியாக 44 இலட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இதற்காக 7,105 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டணமில்லாப் பேருந்துகளை அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறு வியாபாரம் செய்யக்கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
இதனை அரசு தனது வருமான இழப்பாகக் கருதவில்லை. மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டமாகவே கருதுகிறது. பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். 500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பழைய பேருந்துகளைப் புதுப்பித்திடவும் அறிவுறுத்தியிருக்கிறேன்.
இதுமட்டுமன்றி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கவும், உலக வங்கி உதவியோடு மேலும் ஆயிரம் பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்தகைய திட்டங்களை தீட்டுகிறோம். சொன்னதைச் செய்ய மட்டுமல்ல சொல்லாததையும் செய்யவும் முயற்சித்து வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு. புதிய, புதிய திட்டங்களை நாளும் உருவாக்கி அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. துறைதோறும், துறைதோறும் தொண்டு செய்வோம்."
இவ்வாறு அவர் அறிவித்தார்.