அமோனியா கசிவால் மீண்டும் பரபரப்பு: "பயப்பட வேண்டாம்..." திருவள்ளூர் ஆட்சியரின் அவசர அட்வைஸ்
பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் இருந்து மீண்டும் கசிந்த அமோனியா வாயு. மக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்.

பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு அகற்றும் பணியின் போது லேசான கசிவு ஏற்பட்டு, மீண்டும் சரிசெய்து அமோனியா வாயு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கூறுகையில், லேசான கசிவு சரி செய்யப்பட்டது. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. எந்த பிரச்சினையும் இல்லை, 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கசிவு இருந்தால் அடைக்க தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளது. முழுவதுமாக எடுத்து முடித்த பின்பு கொள்ளளவு கூற முடியும். மிக சிறிய அளவில் கசிவு என்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாளை மாலை உரிய தகவல் அளிக்கப்படும். அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
பெரியபாளையம் பகுதியில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி 18 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள அமோனியாவை வெளியேற்றும் பணிகள் அகற்றும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இதற்காக 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயுக்கள் சென்று விபத்து ஏற்பட்டது. இதில் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 தொழிலாளர்கள் உயிரிழந்தள்ளனர்.
இந்த நிலையில் வாயு கசிந்த இடத்தில் இருந்து அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கவிதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்புட் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 2 தினங்களில் அமோனிய வாயுவை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு அம்மோனியா வாயு வேறு டேங்கர் லாரிக்கு மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் 15 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 மீட்டர் தூரத்திற்கு யாரும் வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கிய நிலையில், காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சென்னை பெரியபாளையம் சாலையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. மிக பாதுகாப்பாக அமோனியா வாயு எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மாலை 5 மணிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















