ஹெல்மெட் போட்டவங்களுக்கு போலீஸ் கொடுத்த செம சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?
திருப்பத்தூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தக்காளி கொடுக்கப்பட்டது.

திருப்பத்தூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தக்காளி கொடுத்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினரின் செயலை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளில் சில முறையாக ஹெல்மெட் அணிந்து செல்வதில்லை. இதனால், பல விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகள் சில நேரங்களில் மரணத்தில் போய் முடிகிறது. பெரிய நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுவிட்டதால், பலர் தவறாமல் அணிந்து செல்கிறனர். சிறு, சிறு நகரங்களில் கட்டாயமாக்கப்பட்டாலும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் சிலர் ஹெல்மெட் அணிவதில்லை. அதற்காக போக்குவரத்து போலீசார் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று திருப்பத்தூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவின் குமார் தலைமையிலான போலீசார், ஜின்னா சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தங்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, விபத்து அபாயத்தை உணர்ந்து முறையாக தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை போலீசார் அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக தக்காளிப் பழங்களை பரிசாக கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரங்களை கொடுத்தனர்.
தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் தக்காளி கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை போலீசாரை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















