25,000 ரூபாயுடன் கடிதம் எழுதி ரயில் முன் பாய்ந்த முதியவர்... அதிர்ச்சி தரும் காரணங்கள் - யாருக்கு இந்த நிலைமை வரக்கூடாது
தன்னை பார்க்க யாரும் வரமாட்டார்கள். இறந்த பின்னர் தனது உடலை பிரேத பரிசோதனை செய்து மருத்துவமனையில் இருந்து இடுகாட்டில் புதைத்து விடுங்கள். அதற்காக 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளேன்.

வாணியம்பாடியில் ரயில் நிலையம் அருகே வயது முதிர்ந்த காலத்தில், தன்னை கவனிக்க யாரும் இல்லை, யாருக்கும் தொந்தரவு அளிக்க கூடாது, தனது உடலை புதைக்க 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளேன் என கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவனிக்க யாரும் இல்லாததால் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நகராட்சிக்குட்பட்ட, நியூடவுன் இயில்வே கேட், அருகாமையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில், முதியவர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவரின் சட்டை பையில், தனது பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களை அவர் ஒரு காகிதத்தில் குறிப்பாக எழுதி வைத்திருந்தார்.
அதனை கைப்பற்றியபோது அதில், இறந்தவர் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 75) என்பதும், இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியல் துறையில் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், இவருக்கு திருமணம் ஆகவில்லையெனவும், வயது முதிர்வு காரணமாக மிகவும் சிரமபட்டு வருவதாகவும் அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதற்கு யாரும் காரணமில்லை எனவும், தனது நண்பர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லையெனவும் இருந்தது.
தன்னை பார்க்க யாரும் வரமாட்டார்கள்
மேலும், தன்னை பார்க்க யாரும் வரமாட்டார்கள் எனவும், இறந்த பின்னர் தனது உடலை பிரேத பரிசோதனை செய்து, மருத்துவமனையில் இருந்து இடுகாட்டில் புதைத்து விடவும், அதற்காக 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளதாகவும், நான் குடியிருக்கும் வீட்டில், சடலத்தை வைக்க விரும்பவில்லையெனவும், தயவு செய்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளருக்கு கைப்பட கடிதம் எழுதியது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வயது முதிர்ந்த காலத்தில் தன்னை கவனிக்க யாரும் இல்லை என முதியவர் தனது இறுதிசடங்கிற்கு பணத்தை வைத்துக்கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019





















