கனவில் வந்த முருகன்! குளத்தில் தோண்டியபோது கிடைத்த அதிசயம்! பரபரப்பில் கிராம மக்கள்!
திண்டிவனம் : ஏண்டியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த குளத்தில் தோண்டிய போது கிடைத்த அதிசய வேல், முருகர் சிலை இருப்பதாக பெண்ணின் கனவில் வந்த அதிசயம்!

விழுப்புரம் : திண்டிவனம் அருகே எண்டியூர் கிராமத்தில் குளத்தில் முருகன் சிலை மற்றும் வேல் இருப்பதாக பெண் ஒருவர் கனவில் தொடர்ந்து மூன்று நாட்களாக தோன்றியதால் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தோண்டப்பட்டது.
கனவில் வந்த முருகன்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக எண்டியூர் காளியம்மன் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் முருகர் சிலை மற்றும் வேல் இருப்பதாக கனவில் தோன்றி உள்ளது. தொடர்ந்து கனவில் வருவதால் அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் உள்ள பூசாரி அருள் என்பவரிடம் நடந்ததை புவனேஸ்வரி கூறியுள்ளார். இதனை அருள் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களிடம் தெரிவித்து, பம்பை உடுக்கை அடித்து கோவில் முன்னால் சாமியிடம் கேட்போம் என முடிவு செய்துள்ளனர். மேலும் தேங்காயை கையில் வைத்து குளத்தில் சிலை இருப்பது உண்மை என்றால் தேங்காய் நேராக நிற்க வேண்டும் என சோதனை செய்து பார்த்துள்ளனர்.
பழமை வாய்ந்த குலத்தில் சிலை ?
இந்த சோதனையில் தேங்காய் எழுந்து நிற்கவே, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பம்பை உடுக்கை அடித்து சாமியை அழைத்துள்ளனர். அப்போது புவனேஸ்வரிக்கு அருள் வந்து ஆடி உள்ளார். பின்னர் முருகர் கோவிலில் இருந்து வேல் எடுத்துக்கொண்டு காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பழமை வாய்ந்த குலம் வரை மேளதாளங்கள் முழங்க ஆடிக்கொண்டே சென்று குளத்தில் வேல் குத்தி இந்த இடத்தை தோண்டும் படி அருள்வாக்கு கூறியுள்ளார். வேல் குத்திய இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த சூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக அனைத்து கோயில்களிலும் திரிசூலம் எனப்படும் மூன்று அம்புகளைக் கொண்டு இருக்கும். ஆனால் இந்த குளத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஐந்து அம்புகளை கொண்ட சூலம் எடுக்கப்பட்டது. இதனால் புவனேஸ்வரி கனவில் தோன்றியது இந்த சூலம் மற்றும் முருகர் சிலையும் தான் என நினைத்து ஊர் பொதுமக்கள் குளத்தை மீண்டும் தோண்ட ஆரம்பிக்கும் பொழுது தண்ணீர் அதிக அளவில் வந்தது. இதனால் பள்ளம் எடுக்கும் பணியை நிறுத்திவிட்டனர். குளத்தில் கிடைத்த வேலுக்கு அபிஷேகம் செய்து, முருகர் கோவிலில் வைத்து பூஜை செய்து கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
பள்ளம் தோன்டினால் முருகர் சிலை கிடைக்குமா?
மீண்டும் இன்று மாலை அதிநவீன நீர் இறைக்கும் மோட்டார் வரவழைத்து அனைத்து தண்ணீரையும் குளத்தில் இருந்து அப்புறப்படுத்தி, ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்ட ஊர் பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பள்ளம் தோன்டினால் முருகர் சிலை கிடைக்குமா? என்ற ஆர்வத்தில் ஊர் பொதுமக்கள் இருப்பதால், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இக்கதையை ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





















