TVK Manadu: காவல்துறை தீவிர கெடுபிடி.. 33 நிபந்தனைகளுடன் தவெக மாநாட்டிற்கு அனுமதி..! விஜயின் அடுத்த மூவ் என்ன?
TVK Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
TVK Manadu: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின், முதல் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக மாநாட்டிற்கு அனுமதி - காவல்துறை
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக, சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்தார். இதைதொடர்ந்து, இந்த மாதம் அந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாநாட்டிற்கான அனுமதி கோரி, தவெக சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜிடம் மனு அளிக்கப்பட்டது. வரும் 23ம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
33 நிபந்தனைகளுடன் அனுமதி:
மாநாட்டு அனுமதிக்கான கடிதத்தினை தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடமிருந்து பெற்றுக்கொண்டார். 33 நிபந்தனைகளுடன் சீலிடப்பட்ட கவரில் இந்த அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மாநாடு நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு ஏற்படக்கூடாது என்றும் காவல்துறை அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று உள்ளிட்ட 33 நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சி வட்டாரத்தின் அழுத்தம் காரணமாகவே, விஜயின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் நிபந்தனைகளுடன் விஜய் கட்சி மாநாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திட்டமிட்டபடி, வரும் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை விஜய் வெளியிடுவார் என கருதப்படுகிறது.
தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்:
முன்னதாக மாநாடு குறித்த விஜய் வெளியிட்ட அறிவிப்பில், “நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்” என வலியுறுத்தியுள்ளார்.
விஜய் கட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்:
கட்சி தொடங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் விஜய் அறிவித்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தார். சுமார் ஆறு மாத காலங்களுக்குப் பிறகு, அந்த கட்சியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.