திருவாரூர் தீமிதி திருவிழா விபத்து எதிரொலி... அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்!
திருவாரூர் மாவட்டத்தில் இனி திருவிழாக்கள் அனைத்தும் பகல் வேளையில் மட்டுமே நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நன்னிலம் பகுதியில் தீமிதி திருவிழாவில் தீ மிதித்த இருவர் தீயில் விழுந்தனர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனி திருவிழாக்கள் அனைத்தும் பகல் வேளையில் மட்டுமே நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.
இந்த தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து கரகம் எடுத்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த தீமிதி திருவிழாவில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக தீ மிதித்த நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வயது 38 சக்தி வினாயகம் வயது 22 ஆகியோர் தவறி விழுந்ததில் தீக்காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீமிதி திருவிழாவில் இரண்டு நபர்கள் தவறி தீயில் விழுந்தது என்பது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து மதம் சம்பந்தமான திருவிழாக்கள் தேர் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும் இதன் தொடர்பான விண்ணப்பம் பரிசீலனை செய்திட தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான கூட்டம் வட்டாட்சியர் பொதுப்பணித் துறை காவல் துறை வட்டார வளர்ச்சி அலுவலர் மின்வாரியம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் பிஎஸ்என்எல் ஆகியோர்கள் கலந்து கொண்டு நடத்தப்பட வேண்டும் என்றும் தொடர்புடைய துறையினரால் தடையின்மைச் சான்று பெற்ற பின்னரே மேற்காணும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் பகல் வேளையில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்