நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு அறைகூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
எந்த மாநாட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் மது - போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இம்மாநாட்டில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கத்திற்கான இனையத்தை ஆதவ் அர்ஜூன் தலைமையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய திருமா, “என் விடுதலை சிறுத்தைகளே! என் நன்றியை உங்களுடைய காலடியில் சமர்பிக்கிறேன். எங்கு பார்த்தாலும் நீலம், சிவப்பு மயம். எப்போதும் இயற்கை நம் பக்கம் தான். எங்கு வானம் மழை கொட்டுமோ என்று அச்சிங்கொண்டிருந்தேன். ஆனால் வழக்கம்போல் இயற்கை நம் பக்கம் தான் இருக்கிறது.
ஒற்றை கோரிக்கை மதுவிலக்கு என்பதுதான். இது புதிதாக எழுப்பும் கோரிக்கை அல்ல. நாம் கண்டுபிடித்த புதிய கோரிக்கையும் இல்லை. கவுதம புத்தர் காலத்தில் இருந்தே இந்த கோரிக்கை எழுந்துள்ளது. திருமாவளவன் ஏன் திடீரென மதுவிலக்கு பற்றி பேசுகிறார். திடீர் ஞானம் ஏன் என கேட்கிறார்கள். நான் சாதிப்பெருமை, மதப்பெருமை குறித்து பேசுபவன் அல்ல. புத்த பெருமையை பேசுபவர்கள். புத்தர், அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் வழி வந்ததால் ஞானம் வந்தது. செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்த இருந்த மாநாட்டை தள்ளி வைத்து நடத்தியுள்ளோம். எந்த மாநாட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாநாட்டில் புதியதாக காந்தி மற்றும் ராஜாஜியின் கட்அவுட் வைத்திருக்கிறோம். அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் மது ஒழிப்பு வேண்டும். அரசியமைப்பு சட்டம் 47 மது ஒழிப்பு தொடர்பாக கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம் என கூறிவிட்டார் என சில அரைவேக்காடுகள் ஊடகளில் சிலர் பேச தொடங்கிவிட்டார்கள். இந்த நாட்டை சாதி, மத வெறியர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.” எனப் பேசினார்.