Flood Alert: காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியே எட்டியது. மேட்டூர் அணை நிரம்பியதால் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,95,000 கன அடியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து 16 கண் மதகுகளில் உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள்ளாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டிய நிலையில், தற்போது நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவேரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகம் உள்ளதால் கடந்த ஐந்து நாட்களாக ஒகேனக்கலில் பரிசல் சவாரி நிறுத்தப்பட்டது.
நீர்வரத்தானது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினருக்கு மேட்டூர் அணையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.