"போக்குவரத்துறையை சிறிதும் கீழே வராமல் திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்டது" -அமைச்சர் கே.என்.நேரு.
திமுக ஆட்சியில் இன்னும் ஆறு மாதத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பணபலன்கள் வழங்கப்படும்.
சேலம் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பண பலன் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 300 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 82.22 கோடி மதிப்பிலான பண பலன்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக சேலம் ஜான்சன்பேட்டை போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, சேலம் அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் பொன்முடி, அரசு போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "திமுக ஆட்சியில் இன்னும் ஆறுமாதத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிதிலேயே ஓய்வூதிய பணபலன்கள் வழங்கப்படும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது, 5600 பேருந்துகள் மட்டுமே வாங்கினர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் 5,500 புதிய பணி நியமனம் சேலம் மாவட்டத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் திமுக ஆட்சி காலத்தில் மூன்று ஆண்டுகளாக இருந்த நிலையில் அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகளாக கொண்டுவரப்பட்டது. பின்னர் மீண்டும் திமுக ஆட்சியில் மீண்டும் மூன்றாண்டுகளாகவே கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்துடன் டிஏ இணைத்தது திமுக ஆட்சிக்காலத்தில் தான், 30 ஆண்டுகள் பணிபுரிந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.
போக்குவரத்துறையை சிறிதும் கீழே வராமல் திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்டது. பேருந்து கட்டணத்தை ஏற்றாத காரணத்தினால் அரசாங்கத்தின் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கக்கூடிய நிதி தரமுடியவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களில் கோரிக்கைகள் வென்றெடுக்க கடுமையாக போராட வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது சுலபமாக உள்ளது" என்றார்.
மேலும், போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுக்கு உறுதுணையாக இருப்பது நல்லது, அப்படி இல்லை என்றால் சிரமம் வரும் என்றும் திமுக தொழிற்சங்கத்தில் இருந்தால் கடுமையான டூட்டிகளை போடுவார்கள், ஆட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை தொழிலாளர்களுக்கு உள்ளது எனவும் கூறினார். அரசாங்கத்தில் கடுமையான நெருக்கடி உள்ளது இருந்த போதிலும் தமிழக முதல்வர் ஓய்வுக்கான பணபலன்களை வழங்கி உள்ளார் எனவும் தெரிவித்தார்.