தமிழகத்தில் பாஜக இதைத்தான் செய்கிறது; அதிமுகவுக்கு புரிகிறதா? - திருமாவளவன் சரவெடி பேச்சு
ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தற்போது ஆர்எஸ்எஸ் ரவியாக பணியாற்றி வருகிறார் - திருமாவளவன் விமர்சனம்
விழுப்புரம் : ஆர் எஸ் எஸ் நடத்தும் மத ஊர்வலத்தை முதல்வர் அனுமதிக்க கூடாது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி நிதியாக விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் உறுப்பினர்கள் 533 கிராம் தங்க நகைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய தொல் திருமாவளவன் “அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. ஆனால் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பானது மத ஊர்வலத்தை முன்னெடுத்து இருக்கிறது. இது சமூகத்திற்கும் சமூக கோட்பாட்டிற்கும் எதிரானது” எனவும் பேசினார்.
மேலும், அக்டோபர் இரண்டாம் நாளிலேயே அன்றைய தினம் சமூக நல்லிணக்க பேரணியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் மத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு அவர்கள் மத ஊர்வலம் நடைபெற்றால் சமூக, சமய கோட்பாட்டிற்கு எதிராகவும், மதக் கலவரங்களை தூண்டும் விதமாகவும் நடைபெறும் என தெரிவித்தார். இதனால் இந்த மத ஊர்வலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தார். ஆளுநர் ரவி அவர்கள் தற்போது ஆர்எஸ்எஸ் ரவியாக பணியாற்றி வருகிறார் என கூறினார்.
விசிக.தொல் திருமாவளவன் பேட்டியில் கூறியதாவது:-
விசிகவை தொடர்ந்து எச்.ராஜா அவர்கள் சீண்டி வருகிறார். மேலும் விசிகவை தொடர்ந்து தீயசக்தி என எச்.ராஜா கூறி வருகிறார். தொடர்பு இல்லாத பிரச்சினையில் எல்லாம் எங்களைத் தொடர்புப்படுத்துகிறார். விசிகவை தடை செய்ய வேண்டும் என தற்போது எச்.ராஜா கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் விசிகவின் மீதும் நாங்கள் பேசும் அரசியல் மீதும் எந்த அளவிற்கு அவருக்கு வெறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.அவருடைய நோக்கம் தமிழ்நாட்டை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வெறுப்பு அரசியலின் துணையால் வன்முறை காடாக்க வேண்டியது தான் அவருடைய நோக்கம்.
அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் இயக்கமாக, அவர்களை கண்டிக்கும் விதமாகவும், அவர்களுக்கு எதிராக மக்களை உருவாக்கும் இயக்காமாக விடுதலை சிறுத்தை கட்சி இயங்குகிறது. இதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் அவருடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி கொள்கிறார். அதனை நான் ஏற்கவில்லை.திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது. தொடர்ந்து திமுகவை விமர்சிப்பது மூலமாக ஊடக வெளிச்சத்தில் இருக்கலாம் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். அவர்களிடம் விளம்பரம் மோகம் உள்ளது.
மேலும் திமுக அரசினை நாங்கள் தான் எதிர்க்கிறோம் என்றும் திமுகவிற்கு அடுத்த இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதன் கூட்டணி கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளப் பார்க்கிறார்கள். இதை அதிமுக உணர்கிறதா எனத் தெரியவில்லை. திமுக- பிஜேபி என்ற அரசியலை மாற்றி அமைக்க வேண்டும் என்ற திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நாங்கள் அவர்களின் சதிவலைகளில் சிக்காமல், நாங்கள் துணிச்சலாக அவர்களின் முகத்திரையை கிழிக்கக்கூடியவர்களாக, துணிச்சலாக சனாதனத்தை அம்பலப்படுத்தக் கூடியவர்களாக இருப்பதனால் பாஜகவினர் எங்களை அம்பலப்படுத்தும் விதமாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியில் கூறினார்