ஐ.ஏ.எஸ் தேர்வில் 6 முறை தோல்வியடைந்து 7-வது முறை வெற்றி கொடிநாட்டிய தமிழனின் கதை
வறுமையான குடும்பத்தில் பிறந்து ஐ.ஏ.ஸ் தேர்வில் 6 முறை தோல்வி அடைந்து 7ஆவது முறை வென்ற தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் ஜெய்கணேஷின் கதை
இந்திய பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் ஐ.ஏ.எஸ்-ஆக பார்ப்பது என்பது வாழ்நாள் கனவாக உள்ளது. வசதியான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு கிடைக்கும் மேம்பட்ட கல்வி மூலமும் வழிகாட்டுதல் மூலமும் ஐ.ஏ.எஸ் இலக்கை நோக்கி பயணிக்கும் நிலையில் இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து முதல்தலைமுறை பட்டதாரிகளாக யு.பி.எஸ்.சி தேர்வெழுத வருபர்களுக்கு சிவில் சர்விஸ் தேர்வுகள் மிகப்பெரிய சவாலாகவே இன்னும் இருந்துவரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தொடர்ந்து ஆறு முறை தோல்வி அடைந்து ஏழாவது முறை வெற்றி இலக்கினை அடைந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு அருகே உள்ள வினவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். அவரது தந்தை தோல் தொழிற்சாலையின் மேற்பார்வையாளர்காக இருந்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஜெயகணேஷ் தனது எட்டாம் வகுப்பு வரை உள்ளூரை சேர்ந்த பள்ளியிலும் தனது பத்தாம் வகுப்பை அருகில் இருக்கும் சிறுநகரத்திலும் படித்து முடித்த நிலையில் மேற்கொண்டு பதினோராம் வகுப்பு பயில அவர் விருப்பமில்லை. குடும்ப வறுமையை போக்க உடனடியாக வேலை கிடைக்கும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தார் ஜெய்கணேஷ். அவர் பாலிடெக்னிக் சேர்ந்த போது அவரது கிராமத்தை சேர்ந்த சக நண்பர்கள் பள்ளியில் இருந்து இடைநின்று அருகில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் வேலைக்கும் சென்றனர். தனது குடும்ப வறுமைக்கு மத்தியில் 91% மதிப்பெண்கள் உடன் தனது டிப்ளமோ படிப்பை முடித்த ஜெய்கணேஷ். தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பி.இ படிப்பை முடித்தார். 2000-ஆம் ஆண்டில் தனது வேலைக்காக பெங்களுரூ நோக்கி பயணித்தார் ஜெய்கணேஷ். பெங்களூருவில் பொறியியல் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெய்கணேஷுக்கு 2500 ரூபாய் சம்பளம் என்பது போதுமானதாக இல்லை. அப்போதுதான் ஜெய்கணேஷுக்கு ஐ.ஏ.எஸ் பற்றின கனவுகள் மனதில் தோன்றின.
தான் பெங்களூருவில் இருந்தாலும் தனது சிந்தனைகள் அனைத்தும் தனது கிராமத்தை பற்றியும் அங்குள்ள நண்பர்களின் வாழ்க்கை நிலைபற்றியுமே இருந்ததாக கூறுகிறார் ஜெய்கணேஷ். தனது நண்பர்கள் வறுமையில் உழல்வதற்கு காரணம் இடைநிற்றல் என்று உணர்ந்த ஜெய்கணேஷ் அவர்களை வழிநடத்த யாரும் இல்லை என்பதை உணர்ந்தார். பெங்களூருவில் தான் பார்த்த வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊருக்கு வந்த ஜெய்கணேஷ், தனது தந்தைக்கு தோல் தொழிற்சாலையில் கிடைத்த 6500 ரூபாய் பணத்துடன் ஐ.ஏ.எஸ் கனவை அடைவதற்காக சென்னையை நோக்கி பயணித்தார். குடிமைப்பணிக்காக தான் எழுதிய முதல் இரண்டு தேர்வுகளிலும் முதல் நிலைத் தேர்விலேயே தோல்வி அடைதாலும் விடாமுயற்சியை கைவிடவில்லை. தான் தேர்வு செய்த மெக்கானிக்கல் பாடத்தை கைவிட்டு சமூகவியல் பாடத்தை தேர்வு செய்து அடுத்த தேர்வுக்காக தயாரானார் ஜெய்கணேஷ். தான் வறுமையில் உழன்றாலும் தோல்விக்கு பின் மீண்டும் ஊர்த்திரும்ப மனமில்லாமல் சென்னை சத்தியம் சினிமாஸ் கேண்டீனில் கணினி பில்லிங் பிரிவில் வேலை செய்து அடுத்த தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
மூன்றாவது முறையாக எழுதிய சிவில் தேர்வில் இறுதித் தேர்வில் வென்ற ஜெய்கணேஷ் நேர்காணலில் ஆங்கில புலமை இன்மை காரணமாக தோல்வியடைந்தார். மீண்டும் தனது ஐந்தாவது முயற்சியில் ஆரம்பத்தேர்வில் தோல்வியடைந்த ஜெய்கணேஷ், தன் மனம் தளராமல் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் பாடம் எடுக்கும் பணியில் சேர்ந்தார். தனது ஆறாவது முயற்சியிலும் நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்த ஜெய்கணேஷுக்கு தனது ஏழாவது முயற்சி வெற்றியை கொடுத்தது. 2008-ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் நடந்த நேர்காணலில் தமிழக அரசியல் தொடர்பாகவும், வரலாறு குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியான போது மொத்தமுள்ள 700 பேரில் 156ஆவது நபர்காக ஜெய்கணேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
குடும்ப வறுமையும் கல்வி வழிகாட்டுதலும் இல்லை என்றாலும் விடாமுயற்சியும் இலக்கை அடைவதற்கான தீராத தேடலும் இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பது ஜெய்கணேஷ் ஐ.ஏ.எஸின் வாழ்க்கை பக்கங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்