திமுக எம்.பியின் முந்திரி தொழிற்சாலையில், அடித்துக் கொல்லப்பட்டாரா பாமக நிர்வாகி?
’’கடலூர் எம்.பி டிஆர்வி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்த கோவிந்தராஜ் சந்தேகமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் காயத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது’’
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). பாமக ஆதரவாளரான இவர் பணிக்கன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள திமுக எம்.பி. டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று கோவிந்தராஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கோவிந்தராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக கடலூர் எம்.பியும் முந்திரி தொழிற்சாலையின் உரிமையாளருமான டிஆர்வி ரமேஷிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உயிரிழந்த கோவிந்தராஜின் உறவினர்களும் பாமக கட்சியை சேர்ந்தவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் சந்தேக மரணம் தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கடலூர் மாவட்ட பாமகவினர் அறிவித்தனர். கோவிந்தராஜின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்திய நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 23 ஆம் தேதி, விழுப்புரம் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜிப்மர் மருத்துவர்கள் முன்னிலையில் கோவிந்தராஜின் உடலானது பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவிந்தராசு கொலையில் உள்ள ஐயம் போக்கப்பட வேண்டும் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும்!#postmortem #JIPMER
— Dr S RAMADOSS (@drramadoss) September 20, 2021
மேலும் இந்த மரணம் தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு தலைமையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
1. கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி உடல் முழுக்க காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!#CBCID
— Dr S RAMADOSS (@drramadoss) September 27, 2021
இந்த நிலையில் உயிரிழந்த கோவிந்தராஜ் காவல்நிலையம் ஒன்றில் பலத்த காயங்களுடன் நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த கோவிந்தராஜின் உடலில் காயங்கள் இருப்பது புகைப்படத்தில் உறுதியாகி உள்ள நிலையில் அவர் அடித்து கொல்லப்பட்டாரா என்ற கேள்வி அவரது குடும்பத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!