பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம்: மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெற்றோர்!
பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில் பெற்றோர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் வயது (55), ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் பூ மலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி வயது (50), இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில், மகளுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகிறார். சந்திரனுக்கு விவசாய நிலம், வீடுகள் இருந்ததால் மூத்த மகன் தினகரன் மற்றும் இளைய மகன் ஜீவா(எ) சேட்டுக்கும் வயது (30), சரிசமமாக சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளார். இவர்கள் இருவருமே கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகின்றனர். மேலும், விவசாய நிலத்தில் இரண்டு மகன்களுக்கும் அருகருகே வீடுகள் உள்ளது. இதனால், யாருக்கும் எந்த தொந்திரவு கொடுக்காமல் இருக்க சந்திரனும் அவரது மனைவியும் ஏரியூர் கிராமத்தில் தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவாவிற்கும் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு ஆத்துமேடு பகுதியை சேர்ந்த சரவணன் மகள் டயானா(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஸ்ரீதேஜா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், டயானா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 27ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் டயானாவை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, டயானாவிற்கு ரத்த அளவு குறைந்து இருந்ததால் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், 9 நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தேஜஸ்ரீ என்றும் பெயர் வைத்துள்ளனர். காலை 9 மணியளவில் டயானா குழந்தையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த தம்பதி மீண்டும் 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால், வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை கல் நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் பெற்ற குழந்தை என்றும் பாராமல் பிஞ்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து இறந்துள்ளது.

பின்னர், இது எதுவுமே நடக்காதது போல் டயானா தனது தாய், தந்தைக்கு குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளது. உடனே வந்து பார்க்கும்படி கூறியுள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது. அப்போது, குழந்தை எப்படி இறந்தது என்று டயானாவின் தந்தை சரவணன் கேட்டுள்ளார். அதற்கு, ஜீவா முதல் குழந்தை ஸ்ரீதேஜா போர்வையை எடுத்து குழந்தை முகத்தில் போட்டு விட்டதால் தான் குழந்தை இறந்தது என்று கூறி இருவரும் நாடகமாடியுள்ளனர். பிறகு, குழந்தை இறந்த விஷயத்தை ஜீவா தனது தந்தையிடம் கூட சொல்லவில்லை. பின்னர், டயானாவின் தந்தையும், தாயும் சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதற்குள் ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா அவசர அவசரமாக வீட்டின் அருகிலேயே விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்து உள்ளார். இதனால், சந்தேகமடைந்த சரவணன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரணை நடத்தி யுள்ளனர். அங்கிருந்து காவல்நிலையத்திற்கு செல்லும் வழியில் தப்பித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜீவா மற்றும் அவரது மனைவி டயானாவை நேற்று வேப்பங்குப்பம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது பிரிவு, 103(1), 238 BNS (பாரதிய நியாய சங்கீத நீதி சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கொன்றதாக குழந்தையின் தந்தை ஜீவா அதிர்ச்சியூட்டும் பகிர் வாக்குமூலத்தை அளித்துள்ளார். இன்று இருவரையும் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்கள் வழக்கை விசாரித்த நீதிபதி சத்திய குமார் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் ஜீவா மற்றும் டயானா ஆகிய இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் வேப்பங்குப்பம் காவல்துறையினர் ஜீவாவை தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும் டயானாவை வேலூர் பெண்கள் தனி சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















