TN Assembly CM Speech: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக விளங்குகிறார் - முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..
மாநில அரசின் நலனுக்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்களில் எதேனும் விளக்கம் தேவைப்பட்டால் அதனை அரசிடம் கேட்கலாம்.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இதே நிலை தான் நீடித்து வருகிறது. மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழ்நாடு அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பேச்சு
இன்றைய கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “ ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனை கருதி இந்த சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ‘அனுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக’ கூறி திருப்பி அனுப்பியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. அவர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காகவே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின் நலனுக்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்களில் எதேனும் விளக்கம் தேவைப்பட்டால் அதனை அரசிடம் கேட்கலாம். இதுவரை அவர் கேட்ட விளக்கங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் கொண்டு திருப்பி அனுப்பியது தமிழ்நாட்டு மக்களையும் அரசையும் அவமதிப்பதாக தான் அர்த்தம். 10 சட்ட முன்வடிகள் உள்ளிட்ட 12 சட்ட முன்வடிவுகள், வேறு சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்.
சட்டமன்றத்தில் இறையான்மைக்கு எதிரானது ஆகும். ஆளுநர் மத்திய அரசிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கான நிதியை பெற்று தரலாம், தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களை பெற்று தரலாம். ஆனால் தமிழ்நாடு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். தினசரி கூட்டம் கூட்டி விதண்டாவாதமான கருத்துக்களை கூறி வருகிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
அவரது கருத்துக்களுக்கு அமைச்சர்கள் உடனடியாக பதில் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாடு வளர்வதை காண பொறுக்காததால் தான் என்னமோ இப்படி செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடிதம் எழுதியுள்ளது எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாகும். திருப்பி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி தர வேண்டுகோள் முன்வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.