Tasmac online: தமிழ்நாட்டில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனையா?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேரவையில் அறிவித்தார்.
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிடம் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அந்த துறையைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிடம் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லிஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த வகை மதுபானங்களில் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று டாஸ்மாக் அறிவித்தது. அதன்படி, குறைந்த ரக மதுபானங்கள் விலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதேபோல், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் 300 ரூபாயும், உயர் ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும், மொத்த விற்பனை கூடங்களிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தன. இந்த விலை உயர்வால் மது குடிப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, கடந்த 2020 மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. சாதாரண வகை 180 மில்லி லிட்டர் மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பிரீமியம் வகை 180 மில்லி லிட்டர் மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாயும், பிரீமியம் வகை 180 மில்லி லிட்டர் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கடைகள், சில தினங்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு மதுவிற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தற்போது மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
Vinayagar Chathurthi 2021: அரசியல் சதுர்த்தியாகும் விநாயகர் சதுர்த்தி..வரலாறு சொல்வது என்ன?