Golden Chariot: தூத்துக்குடி பனிமய மாதாவின் 16 வது தங்கத்தேர் பவனி.. அலைக்கடலென திரண்ட மக்கள்.. முழு விவரம்..
புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா தங்கத்தேர் பவனி இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.
புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். 1582 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி இரக்கத்தின் மாதாவின் ஆலயம் கொச்சி பிஷப் தவோரா ஆண்டகையால் கிரகோப் தெருவில் திறக்கப்பட்டது. இந்த ஆலயம் நாளடைவில் செயின்ட் பவுல் ஆலயம் என்றும் பின்னர் பனிமய மாதா ஆலயம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு 441வது திருவிழாவானது, தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது.
தங்கத்தேர் திருவிழாவானது குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் மட்டுமே நடைபெறுவதால் மிக கோலாகலமாக நடைபெறும். இந்த தங்கத்தேர் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து செல்வது வாடிக்கையாகும்.
தங்கத்தேரின் சிறப்பம்சங்கள்:
இந்த தங்க தேரானது சுமார் 1.50 கோடி மதிப்பில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அன்னையின் மங்கள மாலையான ஜெபமாலை நினைவு கூறும் வகையில் 53 அடி உயரத்தில் தங்க தேர் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற ஆலயங்களில் நடைபெறும் தேரோட்டத்தில் பீடத்தில் உள்ள சொருபத்தை நேரில் எடுத்துச் செல்வது கிடையாது. ஆனால் பனிமயமாத ஆலயத்தில் அன்னையின் சுருபம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகிறது. இந்த தேரின் மேல் பகுதியில் ஒரு நட்சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது அன்னை கடலின் நட்சத்திரம் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னையை சுற்றிலும் ஒன்பது கோள்கள் இருப்பதை குறிக்கும் வகையில் அன்னையை சுற்றி ஒன்பது மீன்கள் உள்ளன .மேலும் அன்னைக்கு தங்க கிரீடமும் அணிவிக்கப்பட்டுள்ளது .பூமி மற்றும் ஆகாயத்தின் ராணி என்பதை குறிக்கும் வகையில் இந்த கிரீடம் அமைக்கப்பட்டுள்ளது.
12 அப்போஸ்தலர்களை குறிக்கும் விதத்தில் தேரில் 12 தூண்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தங்கத்தேரில் நாலு மூலைகளிலும் நான்கு கிளிகள் உள்ளன அதேபோன்று மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித தலையும் மீன் உடலும் கொண்ட கடல் கன்னிகளின் உருவமும் ,இரண்டு காளைகளும் பொருத்தப்பட்டுள்ளன. தேர் முழுவதும் பல்வேறு ரத்தின கற்களாலும் சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த தங்கதேரில் 12 கோத்திரங்களை குறிக்கும் வகையில் 12தூண்களைக் கொண்ட தேரில் பனிமய மாதா மாற்கு, லூக்கா, மத்தேயு, யோவான் ஆகிய சுவிஷேகர்கள், ராஜாக்கள், பெண்தேவதைகள் மற்றும் சம்மனசுக்கள் ஆகியோரை சேர்த்து மொத்தம் 53 சுரூபங்கள் இடம் பெற்றுள்ளன. இவைகள் ஜெபமாலையில் உள்ள 53 மணிகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேரிலுள்ள ஆறு சக்கரங்கள் ஆண்டவரின் 6 கட்டளைகளை குறிக்கும் வகையில் அமைந்துள்ளன.
செயற்கை வைரக்கற்கள், வண்ணக் கண்ணாடிகள், பாசிமணிகள், வெல்வெட் துணி ஆகியவற்றோடு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட காகிதங்களை கொண்டு தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தங்கத்தேர் பவனிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்ப்பறையிலிருந்து தேர்பீடம் எடுத்து வரப்பட்டு ஜூன் 9-ந் தேதி மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசுவதற்காக சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் இந்த பணி முடிந்து திருச்சொரூபம் வைக்கப்பட்டு ஜூன் 11 அன்று போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தங்க முலாம் பூசும் பணியை தொடங்கி வைத்தார்.
தங்கத்தேர் திருவிழா:
திருவிழாவானது, கடந்த 26ம் தேதியன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 16வது தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு மறை மாவட்ட ஆயர் பங்கேற்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தில் உள்ள பேராயர்கள் கலந்து கொண்ட தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அன்னையின் தங்கத்தேர் பவனியும் நடைபெற்றது.
நண்பகல் 12.30 மணி அளவில் தங்கத்தேர் நன்றி திருப்பலியும் மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும், இன்று தேர் திருவிழா நடைபெருவதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.