Migjam Cyclone: புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! ஆனால் மழை சரவெடிதான்! - எங்கெல்லாம்?
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிவலி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து 5 ஆம் தேதி மதியம் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று, (டிசம்பர் 2 ஆம் தேதி), காலை 05.30 மணியளவில் அட்சரேகை 10.5°N க்கு அருகில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. மேலும் தீர்க்கரேகை 84.1°E, புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே 510 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு -தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 4 -ம் தேதி மேற்கு வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது வடக்கு நோக்கியும், தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை:
03.12.2023: கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.12.2023: விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chembarambakkam: சென்னை மக்களே செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் உங்களுக்காக இதோ!
மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,030 கன அடியில் இருந்து 2,556 கன அடியாக குறைவு