கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு ... - மருத்துவமனை விளக்கம்...
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை இன்று உயிரிழந்த நிலையில், எழும்பூர் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை இன்று உயிரிழந்த நிலையில், அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவர்கள் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை குழந்தை உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. உயர்தர சிகிச்சை அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை விளக்கம் அளித்துள்ளது. பாக்டீரியா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து குழந்தைக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாகவும், உயர்தர சிகிச்சை அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தஸ்தகீர் - தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் முஹம்மது மகிருக்கு கடந்த ஜூன் மாதம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு கை அகற்றப்பட்டது. மருத்துவமனையின் தவறான சிகிச்சை தான் கை எடுக்க காரணம் என குழந்தையின் பெற்றோர் புகாரளித்தனர். இந்த பிரச்சினை மிகப்பெரிய அளவில் பிரச்சினையை கிளப்பியது.
எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்தார். மேலும் விசாரணைக்குழு அமைத்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மகிர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்நிலையில் குழந்தை மகிரின் பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தாய் அஜீசா, “மருத்துவர்களில் அலட்சியம், செவிலியர்களின் கவனக்குறைவால் என் மகனின் கை அழுகிப்போன நிலைமைக்கு போய் அகற்றப்பட்டது. அதற்கு நீதி கேட்டு சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இதற்கிடையே 3 நாட்களுக்கு முன்னால் எல்லா மருத்துவர்களும் சேர்ந்து டீன் முன்னாடி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தாங்க.
கடந்த ஜூலை 29 -ஆம் தேதி கடைசியாக குழந்தையின் தலையில் இருக்கும் நீரை ஆய்வு செய்தார்கள். அதில் தொற்று இருப்பது தெரிய வந்தது. பிரச்சினையை அதில் தான் ஆரம்பித்தது. மருத்துவர் குழந்தைக்கு மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் தொற்றுடன் செய்தால் உயிருக்கு ஆபத்து என கூறினார்கள். அதை நான் ஏற்றுக்கொண்டேன். மறுநாள் வயிறு முதல் கால் வரை முதலிலும், பின்னர் நெஞ்சு வரையிலும் வீங்க தொடங்கியது.
நான் மருத்துவரை அழைத்து விவரம் சொன்னேன். அதற்கு அவர்கள் தலையில் வைக்கப்பட்ட குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்படி நடப்பதாக தெரிவித்தார்கள். மேலும் குழந்தை வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகவும் கூறினர். மேலும் மருத்துவர் ஒருவர், குழந்தைக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது இல்லை, மருந்து மட்டும் தான் வேலை செய்வதாக சொன்னார். நான் என்ன இது என்று கேட்டேன்.
அதற்கு நிறைய நரம்புகள் செயலிழந்து விட்டதாகவும், அதனால் கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். எனக்கும் இன்னும் கை அகற்றப்பட்டதற்கான சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை என கூறிவிட்டு, எப்படி மறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொன்னார்கள்?. யாருமே சரியான விளக்கம் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் தவறு செய்தவர்கள். குழந்தை இறந்து விடுவான் என தெரிந்தும் அறுவை சிகிச்சை செய்ய ஏன் முன்வந்தார்கள்.
நான் ஏதாவது கேட்டால், யாரோ சொல்லி நான் பேசியதாக சொல்கிறார்கள். அப்போது அமைச்சர் சொன்னதற்கும், டீன் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?.நீங்கள் செய்த தவறுக்கு என் குழந்தையின் உயிர் போயிடுச்சி. என் குழந்தையின் உடல்நிலை பற்றி கேட்டால் குறைபிரசவம் என காரணம் சொல்கிறார்கள். என் குழந்தைக்கு உரிய நீதி கிடைக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.