TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை அப்டேட் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், நாகை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.06.2023 முதல் 10.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது, ஆனால் மாலை நேரத்தில் நல்ல காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால பூமியின் உஷ்ணம் சற்று தணிந்தது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம், ஆலந்துர், மீனம்பாக்கம், மேடவாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பதிவானது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (மில்லிமீட்டரில்)மதுரை - 35.0, நுங்கம்பாக்கம்- 10.6, கடலூர்- 3.0, மீனம்பாக்கம்- 1.6, குன்னூர்- 0.2, புதுச்சேரி - 19.0, காரைக்கால்- 0.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்பஅலை எச்சரிக்கை: தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.
வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் மழை கோடை மழையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.